பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் பிற்பகலில் தீர்ப்பு


பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் பிற்பகலில் தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Jan 2019 6:29 AM GMT (Updated: 11 Jan 2019 7:03 AM GMT)

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் கூறி உள்ளது.

சென்னை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர், ஜி.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக்கோரி கடந்த 1998-ம் ஆண்டு ஜி.மங்கலம் சர்ஜாபுரம் சந்திப்பில் கோவிந்தரெட்டி என்பவர் தலைமையில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகலூர், ஜி.மங்கலம் உள்பட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமரசம் ஏற்படவில்லை. இந்தநிலையில் போராட்டம் திடீரென கலவரமாக மாறியது. பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசாரை கல், கம்பு, இரும்பு கம்பிகளால் போராட்டக்காரர்கள் தாக்கினர். இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் பலர் காயம் அடைந்தனர். போராட்டத்தின் போது போலீஸ் ஜீப் ஒன்றும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அரசு பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த கலவரம் தொடர்பாக பாகலூர் போலீசார் கோவிந்தரெட்டி உள்பட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த போராட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணரெட்டியும் கலந்து கொண்டதால் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர், 72-வது குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 341(சட்டவிரோதமாக தடுத்தல்), தமிழ்நாடு பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஓசூர் கோர்ட்டில் நடந்தது. பின்னர், கிருஷ்ணகிரி மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையின் போது 27 பேர் இறந்து போனதால் மற்ற 81 பேர் மீதான வழக்கு நடந்து வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணரெட்டி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருந்து வருவதால் இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட்டுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி சாந்தி விசாரித்தார்.  அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். பாலகிருஷ்ண ரெட்டி  தரப்பில் ஆஜரான வக்கீல் டி.செல்வம் இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இந்த உத்தரவின்படி பாலகிருஷ்ணரெட்டி பதவி இழந்தார்.

 3 ஆண்டு சிறை தண்டனைக்கு  எதிராக பாலகிருஷ்ணரெட்டி சென்னை ஐகோர்ட்டில்  மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது.

பாலகிருஷ்ணரெட்டி தரப்பு  பொதுச்சொத்து சேதவழக்கில் தரப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும் என கோரபட்டது. மேலும் எனக்கு எதிராக நேரடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை ; தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என் வாதிடப்பட்டது.

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை ஏன் தடுக்க வேண்டும் என ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. அரசியல் கட்சி தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்து செல்வதில் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.  3 ஆண்டு சிறைதண்டனையை தடுக்க சொன்னால் சரி; தீர்ப்பையே ஏன் தடுக்கவேண்டும் என ஐகோர்ட் கேள்வி எழுப்பியது

பாலகிருஷ்ணன் ரெட்டி தரப்பில்  காவல் ஆய்வாளரை திட்டியதால் என் மீது வழக்கு என காவலரே சாட்சி அளித்துள்ளார். 28 சாட்சிகளில் ஒருவர் கூட என் பெயரை சொல்லவில்லை.  தீர்ப்பு வந்தவுடனேயே அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டதால் எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

கூட்டமாக செய்தார்கள் என்றே குற்றச்சாட்டு,பாலகிருஷ்ணரெட்டி மீது தனிப்பட்ட புகார் இல்லை: அரசுவழக்கறிஞர்

காவல்துறையின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய  வேண்டும். பாலகிருஷ்ணரெட்டிக்கு கீழ்நீதிமன்றம்அளித்த தீர்ப்பு தவறு என கூறுகிறீர்களா? - அரசு வழக்கறிஞருக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

ஐகோர்ட் தண்டனைக்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்பதை மட்டும் கூறுங்கள்: அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி கேள்வி விடுத்தார்

பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் கூறி உள்ளது.

Next Story