பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க. சேர ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை வைகோ பேட்டி


பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க. சேர ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை வைகோ பேட்டி
x
தினத்தந்தி 11 Jan 2019 8:30 PM GMT (Updated: 11 Jan 2019 8:00 PM GMT)

பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க. சேர ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்று வைகோ கூறினார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிறது. தேர்தலுக்கான தேதி அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கிடையே தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ‘வாஜ்பாய் கலாசாரத்தை பின்பற்றி நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம். கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது’ என்று குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த காலங்களில் வாஜ்பாய் இருந்தபோது பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று இருந்தன. இந்தநிலையில் பிரதமர் நரேந்திரமோடியின் பேச்சு குறித்து வைகோ பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம், ‘வாஜ்பாய் காட்டிய வழியில் கூட்டணி அமைப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியிருக்கிறார். வாஜ்பாய் இருந்தபோது, பா.ஜ.க. கூட்டணியில் நீங்கள் இருந்து இருக்கிறீர்கள்?. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க. சேர வாய்ப்பு இருக்கிறதா? மோடியின் அழைப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

வாஜ்பாய் சிறந்த தலைவர்

என்னுடைய 54 ஆண்டுகால பொது வாழ்வில் 24 ஆண்டுகால நாடாளுமன்ற அனுபவத்தில் அடல்பிகாரி வாஜ்பாய் போல சிறந்த மனிதரை பார்த்ததில்லை. அவர் தான் என் நெஞ்சில் இமயமாய் இருக்கும் தலைவர். இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திரமோடிக்கு இப்போது தான் வாஜ்பாய் ஞாபகம் வருகிறதா?.

ஈழ பிரச்சினையில் வாஜ்பாய் கடைப் பிடித்த அதே வெளிநாட்டு கொள்கையை நீங்கள் பின்பற்றுவீர்களா? என்று கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடியிடம் கேட்டபோது, நிச்சயமாக பின்பற்றுவேன் என்று சொன்னார். ஆனால் வெற்றி பெற்ற முதல் நாளே அவர் அதில் இருந்து விலகினார். தனது பதவியேற்பு நிகழ்வுக்கு ராஜபக்சேவை அழைத்தார். இதன் மூலம் எங்கள் நம்பிக்கையில் அவர் கல்லை தூக்கி போட்டார். நாங்களும் அவருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தினோம்.

ஆர்.எஸ்.எஸ். பின்புலம் இருந்தாலும் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டி மதச்சார்பின்மையை வாஜ்பாய் பாதுகாத்தார். மக்கள் நலனுக்காக ஆட்சி புரிந்தார். தங்க நாற்கர சாலை திட்டத்தை கொண்டு வந்தும், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியார் மயமாக்க முயன்றபோது, என் வற்புறுத்தல் காரணமாக தனது முடிவை வாஜ்பாய் மாற்றிக்கொண்டு, தமிழகத்திற்கு நன்மை செய்தார். இப்படி அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை

ஆனால் மோடி அரசு காவிரி பிரச்சினையில் இருந்து அனைத்து விஷயங்களிலும் தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டார் என்பதை அழுத்தம் திருத்தமாகவே சொல்லிக்கொள்கிறேன். வாஜ்பாய் அணுகுமுறைக்கு நேர் எதிராக அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல மோடி செயல்பட்டு வருகிறார். வாஜ்பாய் பெயரை உச்சரிக்கும் தகுதியை கூட அவர் இழந்து விட்டார். அவர் தலைமையிலான பா.ஜ.க.வுடன் நிச்சயமாக ம.தி.மு.க. கூட்டணி வைக்காது. அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை. பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க.வும் இணையாது. இதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்திற்கு 27-ந்தேதி வந்தாலும், எப்போது வந்தாலும் பா.ஜ.க.வுக்கு தோல்வி தான். எங்களை பொறுத்தவரையில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. உறுதியாக இருக்கிறது. தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வென்று சாதனை படைக்கும். தி.மு.க.வின் வெற்றிக்காக ம.தி.மு.க. பாடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story