50 சமையல் கலைஞர்கள் சேர்ந்து சுட்ட 82 அடி நீள தோசை கின்னஸ் சாதனையில் இடம் பெறுமா?


50 சமையல் கலைஞர்கள் சேர்ந்து சுட்ட 82 அடி நீள தோசை கின்னஸ் சாதனையில் இடம் பெறுமா?
x
தினத்தந்தி 11 Jan 2019 10:00 PM GMT (Updated: 11 Jan 2019 8:12 PM GMT)

50 சமையல் கலைஞர்கள் சேர்ந்து சுட்ட 82 அடி நீள தோசை குறித்து கின்னஸ் சாதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஓட்டல் ஒன்றில் சுட்ட 54 அடி நீள தோசையே தற்போது வரை கின்னஸ் சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் 50 சமையல் கலைஞர்கள் இணைந்து 100 அடி நீள தோசையை சுட்டு கின்னஸ் சாதனையில் இடம்பெற முயற்சி செய்தனர். இந்த முயற்சி ஆசிய சாதனை புத்தக பொறுப்பாளர் விவேக் நாயர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த சாதனைக்காக 4 டன் எடையில், 100 அடி நீளத்தில் கியாஸ் இணைப்புடன் கூடிய தோசைக்கல் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 40 கிலோ தோசை மாவு மற்றும் 3 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டது. தோசையை தயாரிப்பதற்கு முன், சமையல் கலை நிபுணர் வினோத்குமார் சமையல் கலைஞர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

82 அடி நீள தோசை

அதைத் தொடர்ந்து, தோசைக்கல் அடுப்பில் தீ பற்றவைக்கப்பட்டது. பின்னர் தோசைக் கல்லில் சமையல் கலைஞர்கள் நெய் ஊற்றி கல்லை பதப்படுத்தினர். அதன் பின்னர், தோசைக் கல்லில் மாவு ஊற்றப்பட்டு பிரத்தியேக கருவி மூலம் மாவு விரிக்கப்பட்டது. தோசை வெந்த பிறகு 50 சமையல் கலைஞர்களும் ஒரே நேரத்தில் தோசையை பக்குவமாக உருட்டி எடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், சரவணபவன் ஓட்டல் நிர்வாக இயக்குனர் சரவணன், நடிகர் நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில், ஆசிய சாதனை புத்தக பொறுப்பாளர் விவேக் நாயர் கூறும்போது, “கின்னஸ் சாதனைக்காக 100 அடி தோசை சுட்டு தயாரிக்க முயற்சி மேற்கொண்டதில், 82 அடி நீளமுடைய தோசை தான் உடையாமல் தயாரிக்கப்பட்டது. எனவே, 82 அடி நீள தோசையாக ஆசிய சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக இந்த சாதனை பதிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் இது குறித்த முடிவுகள் தெரியவரும்” என்றார்.

Next Story