போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீசாரை கிண்டல் செய்து வலைத்தளத்தில் பதிவிட்ட 4 வாலிபர்கள் கைது


போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீசாரை கிண்டல் செய்து வலைத்தளத்தில் பதிவிட்ட 4 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 11 Jan 2019 9:15 PM GMT (Updated: 11 Jan 2019 8:25 PM GMT)

சிவகாசி போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீசாரை சினிமா வசனத்துடன் கிண்டல் செய்து நடித்து ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவகாசி,

கேலி, கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு கருத்து பதிவிட்டு சிலர் வீண் வம்பையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தை பற்றி, அந்த போலீஸ் நிலையத்தின் வாசலிலேயே கேலியான சினிமா வசனத்தை நடித்துக்காட்டி 4 வாலிபர்கள் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முத்துமாரியப்பன் அளித்த புகார் வருமாறு:-

வீடியோ பதிவு

நான் பணியில் இருந்தபோது தூத்துக்குடியில் நடைபெற்ற அரசியல் தலைவர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டு 4 வாலிபர்கள் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நான், அந்த வாலிபர்களுக்கு அனுமதி அளித்தேன். பின்னர் சிறிது நேரத்தில் எனது ‘வாட்ஸ்அப்’பில் ஒரு நம்பரில் இருந்து வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு இருந்தது.

அந்த வீடியோவை பார்த்த போது, அதில் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீஸ் நிலையத்தை அவதூறான முறையிலும், கிண்டல் செய்தும் சினிமா வசனத்துடன் அந்த 4 வாலிபர்களும் நடித்துக் காட்டுவது போல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

சிறையில் அடைப்பு

இந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் சீனிவாசகன் வழக்குப்பதிவு செய்தார். தகாத வார்த்தையால் பேசுவது, காவல்துறையை களங்கப்படுத்துவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஆனையூர் துலுக்கப்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 25), தங்கேஸ்வரன் (23), ராமச்சந்திராபுரம் குருமகன் (24), சுப்பிரமணியபுரம் ஈஸ்வரன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வைரலாக பரவுகிறது

போலீசாரையும், போலீஸ் நிலையத்தையும் கிண்டல் செய்து போலீஸ் நிலைய வாசலில் நின்று வாலிபர்கள் நடித்துக் காட்டிய வீடியோ வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story