கணவர் உயிரிழந்த சோகத்தில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை உயிருக்கு போராடும் 2 மகள்களுக்கு தீவிர சிகிச்சை


கணவர் உயிரிழந்த சோகத்தில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை உயிருக்கு போராடும் 2 மகள்களுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 11 Jan 2019 9:45 PM GMT (Updated: 11 Jan 2019 8:27 PM GMT)

கணவர் உயிரிழந்த சோகத்தில், தனது குழந்தையை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். மேலும் 2 மகள்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தத்தை சேர்ந்தவர் அருளழகன் (வயது 32), தொழிலாளி. இவரது மனைவி சத்யா(27). இவர்களுக்கு காவியா(10), அக்‌ஷயா(5) என்ற 2 மகள்களும், அகிலன்(2½) என்ற மகனும் உள்ளனர். இவர்களில் காவியா ராமநத்தத்தில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த அருளழகன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வறுமை

அருளழகன் இறந்து விட்டதால், வருமானம் இல்லாமல் சத்யா, தனது குழந்தைகளை வளர்க்க முடியாமல் வறுமையில் வாடினார். மேலும் கடன் சுமையும் அதிகமாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் குழந்தைகள் அனாதைகளாகி விடுவார்களே என கருதிய அவர், தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

பாலில் விஷம் கலந்துகொடுத்தார்

அதன்படி நள்ளிரவு நேரத்தில் சத்யா தான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த அரளி விதையை மிக்சியில் அரைத்து, அதை பாலில் கலந்து தனது குழந்தைகளுக்கு கொடுத்தார். தாய் கொடுப்பது விஷம் என்று தெரியாமல் காவியா, அக்‌ஷயா, அகிலன் ஆகிய 3 பேருக்கும் வாங்கி குடித்தனர். பின்னர் விஷம் கலந்தபாலை சத்யாவும் குடித்தார்.

சிறிது நேரத்தில் சத்யா, அக்‌ஷயா, அகிலன் ஆகிய 3 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் அங்கு மயங்கி விழுந்தனர். ஆனால் காவியா மட்டும் மயங்கி விழாமல் அழுதபடி வீட்டில் இருந்து வெளியே வந்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் நடந்த விவரத்தை கூறினார்.

தாய், மகன் சாவு

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காவியா, சத்யா உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சத்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் காவியா உள்ளிட்ட 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை அகிலன் பரிதாபமாக உயிரிழந்தான். காவியா, அக்‌ஷயா ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story