முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு


முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 8:52 PM GMT)

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு கீழ் கோர்ட்டு விதித்த சிறை தண்டனைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

சென்னை, 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக்கோரி 1998-ம் ஆண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸ் ஜீப், அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தமிழக அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ண ரெட்டியும் ஒருவர். இந்த வழக்கில் அவர் 72-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கை சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டு நீதிபதி சாந்தி விசாரித்தார். பின்னர், கடந்த 7-ந் தேதி தீர்ப்பு அளித்தார், அதில், பொதுசொத்துகளை சேதப்படுத்திய பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் குற்றவாளி என்றும், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் தீர்ப்பு வழங்கினார்.

மேல்முறையீடு

தண்டனை பெற்றதால் எம்.எல்.ஏ. பதவியை இழந்த பாலகிருஷ்ண ரெட்டி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

மேலும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை கேட்டும், தீர்ப்பை நிறுத்தி வைக்கவேண்டும் என்று இடைக்கால மனுக்களையும் தாக்கல் செய்தார். இந்த இடைக்கால மனுக்கள் நீதிபதி வி.பார்த்திபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல்கள் சித்வர்த், ஏ.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

ஒரு சாட்சி

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நேற்று இரவு பரபரப்பு தீர்ப்பை அளித்தார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில், அரசு தரப்பில் 28 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில் ஒரே ஒரு சாட்சியான போலீஸ்காரர் மட்டுமே, மனுதாரருக்கு எதிராக சாட்சி சொல்லியுள்ளதாக மூத்த வக்கீல்கள் வாதிட்டனர்.

சிறப்பு கோர்ட்டு சிறை தண்டனை விதித்ததால், மனுதாரர் தன்னுடைய அமைச்சர், எம்.எல்.ஏ. பதவிகளை இழக்க நேரிட்டுள்ளது. பதவியை இழந்து விட்டதை மட்டும் வைத்து இந்த இடைக்கால மனுவை விசாரிக்க முடியாது.

துறவிகள் தேவையில்லை

இப்போது எல்லாம் அரசியலுக்கு துறவிகள் போன்ற நபர்கள் தேவைப்படவில்லை. அரசியல் பாரம்பரியம் அனைத்தும் மீறப்பட்டு விட்டன. அதேநேரம் இந்த சமுதாயம் அரசியல்வாதிகளை முன்மாதிரியாக கொள்கிறது. அப்படி இருக்கும்போது, அந்த நபர்கள் வன்முறைகளில் இறங்கி பொதுச் சொத்துகளை சேதப்படுத்தக்கூடாது. அதேநேரம், இந்த வழக்குப்பதிவு செய்யப்படும்போது, மனுதாரர் எம்.எல்.ஏ.வாகவோ, அமைச்சராகவோ இல்லை. ஆனால், அவர் செய்த குற்றம் கீழ் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், நேற்று சட்டத்தை மீறி செயல்பட்டவர்கள், இப்போது சட்டத்தை இயற்றும் இடத்தில் அமருவதற்காக, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை வேண்டும் என்று எப்படி கோர முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது.

மறுப்பு

இதன் அடிப்படையில் மனுதாரர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிரான குற்றச்சாட்டு தீவிரமானது. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க முடியாது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்.

கீழ் கோர்ட்டு விதித்த தண்டனையை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை வருகிற பிப்ரவரி முதல் வாரத்துக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story