பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் : ஒரே நாளில் 1.45 லட்சம் பேர் சென்றனர்


பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் : ஒரே நாளில் 1.45 லட்சம் பேர் சென்றனர்
x
தினத்தந்தி 12 Jan 2019 6:30 AM GMT (Updated: 12 Jan 2019 9:21 AM GMT)

அரசு சிறப்பு பேருந்துகளில் நேற்று 1.45 லட்சம் பயணிகள் சென்னையிலிருந்து வெளியூருக்கு சென்றனர்.

சென்னை,

தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல் பண்டிகையாகும். 

போகி, பொங்கல்,மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், இதனுடன் சேர்த்து சனி, ஞாயிறு என ஏறத்தாழ ஒருவாரம் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை கிராமங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்பதால் அங்கிருந்து சென்னை வந்து பணிபுரியும் அனைவரும் பொங்கலுக்கு சொந்த ஊர் திரும்புவது வழக்கம்.

இதனால் சென்னை பேருந்து, மற்றும் ரெயில்  நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சமாளிக்க ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் இம்முறையும் தமிழகஅரசு சார்பாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
 
சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஜனவரி 9ந்தேதியில் இருந்து தொடங்கி இயங்கிவருகின்றன. பயணிகளின் வசதிக்காக 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து ஜனவரி 11-ந்தேதியில் இருந்து ஜனவரி 14-ந்தேதி வரை 14,263 பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் மேலும் இதற்காக கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே. நகர் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று மட்டும் அரசு சிறப்பு பேருந்துகளில் 1.45 லட்சம் பயணிகள் சென்னையிலிருந்து வெளியூருக்கு சென்றனர்.

Next Story