பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 15 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு


பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 15 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 12 Jan 2019 8:43 PM GMT (Updated: 12 Jan 2019 8:43 PM GMT)

பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 15 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கல்லூரி மாணவிகள்

நாகப்பட்டினம் மாவட்டம் வாணகிரி கிராம கடல் பகுதியில் குளிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகளான ராஜாராமின் மகள் விவேகா, லோகநாதனின் மகள் மஞ்சு மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமாரின் மகள் சிவப்பிரியா ஆகிய மூன்று பேர் கடல் அலையில் சிக்கி உயிர் இழந்தனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் சிறுவன் ஜெயசூர்யா, கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச்சென்ற போது நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.

மரத்தில் மாரடைப்பு

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த கென்னடியின் மகன் ரிஷோர் மற்றும் செல்வனின் மகன் சந்தியாகு ராயப்பன் ஆகிய இருவரும் கடலில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி உயிர் இழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெம்பட்டியைச் சேர்ந்த உச்சப்பாவின் மகன் ராஜப்பா, தேனீக்கள் கொட்டியதில் உயிர் இழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூரைச் சேர்ந்த பழனியப்பனின் மகன் கணேசன் பனைமரத்தில் பதநீர் சேகரிக்க ஏறும்போது மரத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்.

கைக்குழந்தை

திண்டுக்கல் மாவட்டம் புளியமரத்துக்கோட்டை கோடாங்கிபட்டியைச் சேர்ந்த மோகனசுந்தரத்தின் மகள் சிறுமி சபீதா கிணற்றில் தவறி விழுந்ததை அறிந்த சுமதி, தன் இடுப்பில் வைத்திருந்த கைக்குழந்தை தீபிகாவுடன் காப்பாற்ற முயன்றபோது மூவரும் கிணற்று நீரில் மூழ்கி உயிர் இழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த திருமாலின் மகன் அய்யாவு, தென்னை மரம் ஏறும்போது, கடந்தைகள் கொட்டி உயிர் இழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் முல்லையூரைச் சேர்ந்த முத்துக்கருப்பனின் மகள் சிறுமி கீர்த்தனா குட்டையில் மூழ்கி உயிர் இழந்தார்.

தலா ஒரு ரூ.1 லட்சம்

பொன்னமராவதி வட்டம் செவலூர் விளக்கு அருகில் அரசு பேருந்தும், இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராமனின் மகன் பாலசுப்பிரமணியன் மற்றும் செல்லையாவின் மகன் வினோத் ஆகிய இருவரும் உயிர் இழந்தனர்.

இவர்களின் மறைவு செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். பல்வேறு நிகழ்வுகளில் உயிர் இழந்த 15 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story