சென்னை புத்தக கண்காட்சிக்கு இதுவரை 5 லட்சம் பேர் வருகை விடுமுறை நாளில் ஏராளமானோர் குவிந்தனர்


சென்னை புத்தக கண்காட்சிக்கு இதுவரை 5 லட்சம் பேர் வருகை விடுமுறை நாளில் ஏராளமானோர் குவிந்தனர்
x
தினத்தந்தி 12 Jan 2019 9:30 PM GMT (Updated: 12 Jan 2019 8:45 PM GMT)

சென்னை புத்தக கண்காட்சியில் இதுவரை 5 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் கண்காட்சியில் குவிந்தனர்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சார்பில் 42-வது சென்னை புத்தக கண்காட்சி கடந்த 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் சுமார் 1½ கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

புத்தக கண்காட்சியில், பொதுமக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க தினந்தோறும் மாலையில் புகழ்பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பிரபலங்களை வரவழைத்து கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடையே பேச்சு மற்றும் எழுத்து திறமைகளை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு நிலைகளில் பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

திருக்குறள் போட்டி

புத்தக கண்காட்சியின் 9-வது நாளான நேற்று காலையில் பள்ளி மாணவிகளுக்கான திருக்குறள் போட்டி நடைபெற்றது. மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் முத்துலிங்கம், பேராசிரியர் நெல்லை கவிநேசன், டாக்டர் துளசி குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக பபாசி செயற்குழு உறுப்பினர் ராம.மெய்யப்பன் வரவேற்புரையாற்றினார். இன்று மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டி நடைபெற உள்ளது.

புத்தக கண்காட்சியில் வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தக விற்பனை நடைபெறுகிறது. அந்த வகையில், நேற்று (சனிக்கிழமை) முதல் வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) வரை பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 19 மற்றும் 20-ந்தேதிகளும் விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினங்களிலும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும். நேற்று விடுமுறை தினம் என்பதால் புத்தக கண்காட்சியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

5 லட்சம் பேர் வருகை

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க(பபாசி) தலைவர் எஸ்.வயிரவன், துணைத் தலைவர் பெ.மயிலவேலன் ஆகியோர் கூறும்போது, “புத்தக கண்காட்சியில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்து உள்ளனர். இந்த ஆண்டு 20 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் புத்தக கண்காட்சிக்கு வருகை தருவது இளைஞர்களிடேயே வாசிக்கும் பழக்கம் அதிகரித்து இருப்பதை காட்டுகிறது” என்றனர்.

Next Story