ராமேசுவரம் கோவிலில் 30 தீர்த்தங்கள் பக்தர்களுக்கு அர்ப்பணிப்பு கவர்னர் பன்வாரிலால் பங்கேற்றார்


ராமேசுவரம் கோவிலில் 30 தீர்த்தங்கள் பக்தர்களுக்கு அர்ப்பணிப்பு கவர்னர் பன்வாரிலால் பங்கேற்றார்
x
தினத்தந்தி 12 Jan 2019 11:00 PM GMT (Updated: 12 Jan 2019 9:14 PM GMT)

ராமேசுவரத்தில் 30 தீர்த்தங்கள் புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து, அவற்றை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பக்தர்களுக்கு நேற்று அர்ப்பணித்தார்.

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலமான ராமேசுவரம் ராமாயண இதிகாசத்துடன் மிகுந்த தொடர்புடையது. ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளபடி ராமேசுவரத்தில் 108 புனித தீர்த்தங்கள் இருப்பதாகவும், இந்த தீர்த்தங்களில் நீராடுவது புண்ணியத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது. இந்த தீர்த்தங்கள் அனைத்தும் பராமரிப்பு இல்லாமலும், பக்தர்களின் கவனத்தை ஈர்க்காததாலும் காலப்போக்கில் காணாமல் போய்விட்டன.

இந்த நிலையில் பசுமை ராமேசுவரம், விவேகானந்தா கேந்திரம் ஆகியவை சார்பில் இப்பகுதியில் இருந்த மங்கள தீர்த்தம், நகுல தீர்த்தம், பீமன் தீர்த்தம், அர்ச்சுனன் தீர்த்தம், அனுமன் தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், ருணவிபோசன தீர்த்தம், கபி தீர்த்தம், சர்வரோக நிவாரண தீர்த்தம் உள்ளிட்ட 30 தீர்த்தங்கள் கண்டறியப்பட்டு அவை புனரமைக்கப்பட்டன.

அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

அதனைத் தொடர்ந்து இந்த புண்ணிய தீர்த்தங்களை பக்தர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக தங்கச்சிமடம் அருகே அமைந்துள்ள மங்கள தீர்த்தம் பகுதியில் யாக சாலை அமைக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. இதில் புனரமைக்கப்பட்ட 30 தீர்த்தங்கள் மற்றும் கோடி தீர்த்தம் ஆகியவற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த பூஜையில் 108 குடும்பத்தினர் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார்.

பின்னர் யாக சாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் மங்கள தீர்த்த குளத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் புனிதநீரை மங்கள தீர்த்தக்குளத்தில் ஊற்றினார். இதே போல் 108 குடும்பத்தினரும் புனித நீரை குளத்தில் ஊற்றினர். தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்றன.

Next Story