கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மு.க.ஸ்டாலின் வழங்கினார்


கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 12 Jan 2019 11:30 PM GMT (Updated: 12 Jan 2019 9:28 PM GMT)

தி.மு.க. சார்பில் கொளத்தூர் தொகுதியில் 1,300 பேருக்கு மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கினார்.

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தி.மு.க. சார்பில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா கொளத்தூர் தொகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

விழாவில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட தி.மு.க. நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் ஏழை-எளிய மக்கள் என 1,300 பேருக்கு வேட்டி-சட்டை, புடவை, போர்வை, அரிசி, வெல்லம், நெய், சிறுபருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது அவர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

முதியோர் இல்லம்

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 68-வது வார்டில் உள்ள முதியோர் இல்லத்துக்கும் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு உள்ள 45 முதியோர்களுக்கு புத்தாடை மற்றும் உணவு வழங்கினார். அவர்களுக்காக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் ஐ.சி.எப். முரளிதரன், மேற்கு பகுதி செயலாளர் ஏ.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story