என் மீதான குற்றச்சாட்டுக்கு அரசியல் பின்னணி எடப்பாடி பழனிசாமி பேட்டி


என் மீதான குற்றச்சாட்டுக்கு அரசியல் பின்னணி எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 12 Jan 2019 11:45 PM GMT (Updated: 12 Jan 2019 9:43 PM GMT)

கோடநாடு விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டுக்கு அரசியல் பின்னணி இருக்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை வருகிற 17-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் விமரிசையாக கொண்டாடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கவேண்டும்? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடுமையான நடவடிக்கை

இந்த கூட்டத்துக்கு பின்னர் வெளியே வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தெகல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், டெல்லியில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி நடைபெற்ற ஒரு சம்பவத்தில் என்னை (எடப்பாடி பழனிசாமி) சம்பந்தப்படுத்தி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. துளியும் உண்மை இல்லை.

இந்த செய்தியை வெளியிட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு பின்புலமாக உள்ளவர்கள் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுதொடர்பாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.

வழக்கை திசை திருப்ப...

கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ல் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த குற்றவாளிகள் இதுவரை நீதிமன்றத்துக்கு 22 முறை சென்று வந்துள்ளனர். நீதிமன்றத்தில் எதுவும் சொல்லாதவர்கள், தற்போது புதிதாக ஒரு செய்தியை சொல்லி வழக்கை திசை திருப்ப பார்க்கிறார்கள். அடுத்த மாதம் 2-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

இவர்களுக்கு பின்னால் யார்? யார்? இருக்கிறார்கள் என்பது விரைவில் கண்டறியப்படும். இந்த குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்கு, ஆள் மாறாட்டம், மோசடி, திருட்டு, கூலிப்படை இப்படி பல்வேறு சம்பவங்களில் இந்த குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் வெளியிட்ட செய்தியில், ஜெயலலிதா கட்சி நிர்வாகிகளிடத்தில் ஆவணங்களை பெற்று கோடநாட்டில் வைத்திருந்ததாகவும், அதை எடுக்க சென்றதாகவும் அந்த வீடியோவில் கூறி உள்ளனர்.

கண்டனம்

ஜெயலலிதா, எந்த ஒரு நிர்வாகியிடம் எந்த ஆவணத்தையும் எப்போதும் பெற்றது கிடையாது. ஜெயலலிதாவுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கட்சி நிர்வாகிகளை தங்களது குடும்ப உறுப்பினராக ஜெயலலிதா பாவித்து வந்தார். கட்சிக்காரர்களிடத்தில் அன்பாக பழகி, அவர்களுக்கு தேவையான பதவி வழங்கி அழகு பார்க்கும் தலைவர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவர் மீது இப்படி ஒரு களங்கம் கற்பித்தது உண்மையில் கண்டிக்கத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இதற்கு பின்னால் யார் யாரெல்லாம் இருப்பார்கள்? என்று கண்டறிந்து உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டி, சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குற்றச்சாட்டு குறித்து ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவில்தான் உண்மைக்கு மாறான செய்திகளை ஏன் சொன்னார்கள்? என்று தெரியவரும்.

அரசியல் பின்புலம்

நேரடியாக எங்களை அரசியலில் எதிர்கொள்ள முடியாத, திராணியற்ற, முதுகெலும்பு இல்லாதவர்கள்தான் இப்படிப்பட்ட கோழைத்தனமான குறுக்குவழியை கையாண்டுள்ளார்கள். இந்த குற்றச்சாட்டில் அரசியல் பின்புலம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதற்காகத்தான் வழக்கு தொடர்ந்துள்ளோம். உண்மை வெளிச்சத்துக்கு வரும். ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே என்று அவர் பேட்டியில் கூறுகிறார். அப்படியென்றால், ஏற்கனவே ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே இதெல்லாம் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று அவர்கள் வெளியிட்ட செய்தியிலேயே தெரிகிறது.

இதையெல்லாம் முறையாக விசாரித்தால்தான் உண்மை தெரியவரும். தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் ஏதாவது ஒரு வழக்கு போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். என் மீது ஒப்பந்த முறைகேடு என்று ஒரு வழக்கு போட்டனர். அது நிலுவையில் உள்ளது. அரசு சார்பில் பொங்கல் பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதையும் வழங்கக்கூடாது என்று அவர் கட்சியை சேர்ந்தவரை வைத்து வழக்கு போட்டார் மு.க.ஸ்டாலின். உலக முதலீட்டாளர் மாநாடு வருகிற 23, 24-ந் தேதி நடைபெறுகிறது. அந்த மாநாட்டை தடை செய்யவும் வழக்கு போட்டுள்ளனர். ஒரு பக்கம் தொழிற்சாலை வரவில்லை என்கிறார்கள். மறுபுறம் தொழிற்சாலை வருவதை தடுக்க முயற்சி செய்கிறார்கள்.

அரசியல் நாடகம்

அ.தி.மு.க. அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரக்கூடாது என்ற அடிப்படையில், தொடர்ந்து வழக்கு போடுவதுதான் தி.மு.க.வின் வேலை. உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. ரத்து செய்ததாக தவறான குற்றச்சாட்டை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். உண்மையிலேயே ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்தார். ஆனால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தவர்கள் தி.மு.க.வினர் தான்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இப்போது கிராம சபை கூட்டம் நடத்துகிறார். அவர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது குடிநீர் வசதி உள்பட எதையும் செய்ய தவற விட்டுவிட்டார். இப்போது கிராம சபை கூட்டம் நடத்தி கிராமத்தில் அது இல்லை, இது இல்லை என்று கூறி வருகிறார். இது அரசியலுக்காக செய்கின்ற நாடகம். மக்களை சந்தித்து மக்கள் வாக்களித்து வெற்றிபெற்று முதல்-அமைச்சர் பதவிக்கு யார் வந்தாலும் நாங்கள் தடுக்க மாட்டோம். ஆனால், குறுக்கு வழியை கையாண்டு இந்த அரசை எந்த காரணத்தை கொண்டும் யாராலும் கவிழ்க்க முடியாது. அ.தி.மு.க.வின் சிறப்பு அம்சங் களையும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story