தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைவேற்றிய திட்டங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் பதில்


தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைவேற்றிய திட்டங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் பதில்
x
தினத்தந்தி 13 Jan 2019 10:30 PM GMT (Updated: 13 Jan 2019 10:13 PM GMT)

தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன? என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கிராமங்களுக்கு சென்றாரா?” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுப்பூர்வமான கேள்வி கேட்டுள்ளார். 2006-ல் உள்ளாட்சி தேர்தலை நடத்தியது நாங்கள் தான். குறிப்பாக பல ஆண்டு காலம் மதுரை மாவட்டம் பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியேந்தல் ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தாத சூழல் இருந்தது.

2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் அப்பகுதி மக்களிடம் பேசி சுமுகமாக அந்த தேர்தலை நடத்திய பெருமை நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதுதான். அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும், நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்று, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த என்னுடைய தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அதிகாரமும், நிதி பரிந்துரையும் எந்தெந்த வகையில் வழங்கலாம் என்று 99 பரிந்துரைகளை கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றி அதை செயல்படுத்தி காட்டினோம்.

தலை வரியையும், தலைமேல் வரியையும் நான் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோதுதான் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. குட்டை பராமரிப்பு பணியை கிராம ஊராட்சிகளுக்கு வழங்கினோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தரப்படும் நிதியை அதிகரித்து கொடுத்து இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சி தினவிழாவை கொண்டாடி இருக்கிறோம். கிராமங்களில் எல்லா மதத்தினரும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்பதற்காக பெரியார் பெயரில் சமத்துவபுரங்களை உருவாக்கினோம்.

ஊரகப் பகுதிகளில் ‘நமக்கு நாமே’ திட்டத்தை ஏற்படுத்தி தந்தோம். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை கொண்டுவந்து ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் விருப்பத்துக்கு ஏற்ப ஒவ்வொரு ஊராட்சியை தேர்ந்தெடுத்து அந்த ஊராட்சிக்கு அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையில் ரூ.20 லட்சம் திட்டத்தின் அடிப்படையில் வழங்கினோம். மற்ற துறைகள் மூலமாகவும் ஏறத்தாழ ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.1 கோடி அளவுக்கு நிதி வழங்கி பல திட்டங்களை நிறைவேற்றி கொடுத்து இருக்கிறோம்.

கலைஞர் கான்கிரீட் வீட்டு திட்டம் என்ற பெயரில் கிராமங்களில் கான்கிரீட் வீடுகளை கட்டி கொடுத்து இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் நூல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு 29 ஆயிரம் கிலோ மீட்டர் இருந்த ஊரக சாலைகளை 54 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்து கொடுத்து உள்ளோம். மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.6 ஆயிரத்து 364 கோடிக்கு சுழல் நிதி, வங்கிக்கடன் மற்றும் மானியத்தோடு கூடிய கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நானே நேரடியாக சென்று அந்த திட்ட உதவிகளை ஒவ்வொரு மகளிருக்கும் வழங்கியது மறக்க முடியாத ஒன்று.

தண்ணீருக்காக தவித்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ரூ.616 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி கொடுத்து இருக்கிறோம். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்த்துவைக்க ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், வேலூர் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றி உள்ளோம். மீஞ்சூரில் நெம்மெலி பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறோம். இப்படி பல திட்டங்களை என்னால் அடுக்கிக்கொண்டு இருக்க முடியும். இந்த திட்டங்களை எல்லாம் சொல்லும்போது என் பெயரை சொல்ல வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியும், அவரது கீழ் இருக்கும் அமைச்சர்களும் திட்டமிட்டு ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதாவது, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு தி.மு.க. வழக்கு போட்டது தான் காரணம் என்று கூறுகிறார்கள். வழக்கு போட்டது உண்மை. ஆனால் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று சொல்லி தி.மு.க. வழக்கு போடவில்லை. தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று தான் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலமாக வழக்கு போடப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலில் இருக்கும் குறைபாடுகளை நீக்க வேண்டும். முக்கியமாக இடஒதுக்கீடு. எந்தெந்த சமுதாயத்துக்கு எவ்வளவு இடஒதுக்கீடு என்று இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் மலைவாழ் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று இருக்கிறது. அதை எல்லாம் ஒதுக்கவில்லை. எனவே, வேண்டும் என்றே திட்டமிட்டு இதையெல்லாம் ஒதுக்காமல் தேர்தலை நடத்த முயற்சித்தார்கள். அந்த நேரத்தில் தான் இதை முறைப்படுத்த வேண்டும் என்று கோர்ட்டுக்கு சென்றோம். கோர்ட்டு, இதை முறைப்படுத்தி நடத்துங்கள் என்று உத்தரவு போட்டது. அதுவும் 2017-ம் ஆண்டு மே மாதத்துக்குள் நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. நடத்தினார்களா? அதன்பிறகு 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டது. அப்போதும் நடத்தவில்லை.

சென்னை ஐகோர்ட்டு, தேர்தல் ஆணையரை அழைத்து உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம், சிறைக்கு செல்லும் சூழ்நிலைகூட வரும் என்று கடுமையான உத்தரவை போட்டது. அதற்கும் இந்த ஆட்சி பயப்படவில்லை. இப்போது, 3 மாதத்துக்குள் நடத்துவோம் என்று இதே அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கோர்ட்டில் கூறி உள்ளது.

ஆனால் இதுவரை நடத்தவில்லை. இது யாருடைய தவறு? என் தவறா? முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். நான் முதல்-அமைச்சர் இல்லை. தேர்தல் ஆணையமும் இந்த அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. எனவே, உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு யார் காரணம் என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story