தர்மபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


தர்மபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Jan 2019 11:00 PM GMT (Updated: 13 Jan 2019 10:32 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர் திருநாளாம் தைத்திருநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை வெகு சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தர்மபுரி மாவட்டத்தின் பெயர் இடம்பெறவில்லை என்பது உண்மை தான். இது அறியாமல் நடத்தத் தவறா அல்லது திட்டமிட்டு இழைக்கப்படும் துரோகமா? என்பது தெரியவில்லை.

ஜல்லிக்கட்டு குறித்த அரசிதழில் தர்மபுரி மாவட்டத்தின் பெயர் இடம்பெறவில்லை என்றால், முதல்-அமைச்சரையோ அல்லது தலைமைச் செயலாளரையோ அணுகி மாவட்டத்தின் பெயரைச் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து மக்களின் ஜல்லிக் கட்டு ஆசைக்கு முட்டுக்கட்டைப் போடுவதும், கோவில் திருவிழாக்களில் கூட இத்தகைய நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்று கூறி மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதும் சரியல்ல. இது எதிர்மறை விளைவுகளை அதிகமாக ஏற்படுத்தும்.

தர்மபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தடை விதிக்க நியாயமான காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, தர்மபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story