கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் புதிய திருப்பம் முதல்-அமைச்சர் மீது புகார் கூறியவர்கள் டெல்லியில் 2 பேர் கைது


கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் புதிய திருப்பம் முதல்-அமைச்சர் மீது புகார் கூறியவர்கள் டெல்லியில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jan 2019 12:15 AM GMT (Updated: 14 Jan 2019 12:47 AM GMT)

கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறிய 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று டெல்லியில் கைது செய்தனர். இதனால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. கைதான இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

சென்னை,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.

இதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மற்றொரு குற்றவாளியான மனோஜ், ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டினார்கள்.

மேலும் கோடநாடு கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. இந்த குற்றச்சாட்டில் அரசியல் பின்புலம் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த நிகழ்வுக்கு பின்புலமாக யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு தகவல்கள் பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணைச் செயலாளர் ராஜன் சத்யா, சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசில் புகார் மனு அளித்தார்.

அதன்பேரில் ‘தெகல்கா’ முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 3 பேரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டது.

அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய தனிப்படையினர் நேற்று முன்தினம் டெல்லி விரைந்தனர். உள்ளூர் போலீசார் உதவியுடன் கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைதான 2 பேரையும் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு உள்ளனர். இன்று (திங்கட்கிழமை) அவர்கள் சென்னை அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 பேர் கைதாகி இருப்பது, கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘தெகல்கா’ முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேலையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Next Story