மதுரை மாவட்டம் அவனியாபுர ஜல்லிக்கட்டு 14 பேர் காயம்


மதுரை மாவட்டம் அவனியாபுர ஜல்லிக்கட்டு 14 பேர் காயம்
x
தினத்தந்தி 15 Jan 2019 5:54 AM GMT (Updated: 15 Jan 2019 5:54 AM GMT)

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.3 வது சுற்று மாடு பிடி வீரர்கள் பங்கேற்கிறார்கள். 14 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

மதுரை

தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, சூரியனை வணங்குவதோடு ஜல்லிகட்டும் பாரம்பரிய கலாசாரத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தை திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் தமிழர்களால் உற்சாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று காலை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.ஜல்லிக்கட்டு போட்டிக்காக 636 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கிறார்கள்.பாதுகாப்பு பணியில் 1095 போலீசார்  ஈடுபட்டுள்ளனர் 

வாடிவாசலில் இருந்து துள்ளி வரும் காளைகளை தழுவ முதல் சுற்றில் 75 காளையர்கள் களத்தில் உள்ளனர். ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  10 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு, 5 அவசர உதவி ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. காளைகளுக்கும், வீரர்களுக்கும் காயம் ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்துள்ளன.

வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கக் காசு, தங்கச் சங்கிலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காளைகள் மற்றும் வீரர்களின் பாதுகாப்புக்காக களம் முழுவதும் தேங்காய் நார்கள் பரப்பபட்டு உள்ளது.

மதுரை ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க போலி பதிவு சீட்டுடன் வந்த ஒருவர் வெளியேற்றப்பட்டார். போலி பதிவு சீட்டுடன் வந்த அழகுநாச்சியார்புரத்தை சேர்ந்த கண்ணன் என்பவரை  ஜல்லிக்கட்டு குழுவினர் வெளியேற்றினர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2ஆம் சுற்று முடிந்ததை அடுத்து 3வது சுற்றில் புதிய வீரர்கள் களமிறங்கியுள்ளனர். 2 சுற்றுகளின் முடிவில் 167 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழந்துவிடப்பட்டன.

ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 14 பேர் காயம் அடைந்துள்ளனர் அவர்களுக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Next Story