காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்


காணும் பொங்கல்: சென்னை-புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்
x
தினத்தந்தி 16 Jan 2019 8:30 AM GMT (Updated: 16 Jan 2019 9:50 AM GMT)

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னை

பொங்கல் சிறப்பு பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 7 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்திருப்பதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து கடந்த 11-ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், 14-ஆம் தேதி வரை 13 ஆயிரத்து 871 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

சிறப்பு பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 7 லட்சத்து 17 ஆயிரத்து 392 பேர் பயணம் செய்திருப்பதாகவும், ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 705 பேர் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் சிறப்பு பேருந்துகளில் செய்யப்பட்ட முன்பதிவுகள் மூலம் 9 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

காணும் பொங்கலையொட்டி, சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

காணும் பொங்கலை முன்னிட்டு நாளை சென்னையில் அண்ணாசதுக்கம், வண்டலூர், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. 

நாளை காலையில் இருந்து நள்ளிரவு வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பிராட்வே, கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், கே.கே.நகர், அடையார், ஆதம்பாக்கம், வடபழனி, அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது என போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story