பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி; சிறந்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு பைக் பரிசு


பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி; சிறந்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு பைக் பரிசு
x
தினத்தந்தி 16 Jan 2019 1:57 PM GMT (Updated: 16 Jan 2019 1:57 PM GMT)

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 10 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

மதுரை,

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.  அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தது.  ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், 2வது நாளாக பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை தொடங்கியது.  இதனை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  போட்டியில் 988 காளைகளும், 846 வீரர்களும் பங்கேற்றனர்.  1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

இதன்படி, போட்டியில் 10 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.  9 காளைகளை பிடித்த அஜய்க்கு 2வது பரிசும், 8காளைகளை பிடித்த கார்த்திக்கிற்கு 3வது பரிசும் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை பிடித்த அஜய்க்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான முதல் பரிசாக மேலூர் மலம்பட்டியை சேர்ந்த உரிமையாளர் பிரபுவுக்கு கார் வழங்கப்பட்டது.  2வது பரிசு பூவந்தியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் காளைக்கு வழங்கப்பட்டது.  3வது பரிசு மதுரை கே.கே. நகரை சேர்ந்த ப்ரியா ராஜசேகரன் என்பவரது காளைக்கு வழங்கப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 48 பேர் காயமடைந்தனர்.  இவர்களில் படுகாயமடைந்த 13 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story