கோடநாடு விவகாரம் : கைதான 2 பேர் ஜாமீனில் விடுவிப்பு


கோடநாடு விவகாரம் : கைதான 2 பேர் ஜாமீனில் விடுவிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2019 12:08 AM GMT (Updated: 17 Jan 2019 12:08 AM GMT)

கோடநாடு விவகாரத்தில் கைதான 2 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் எழும்பூர் கோர்ட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. வீட்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஷயான், மனோஜ் உள்ளிட்டோர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் கோடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி, ஷயான், மனோஜ் மற்றும் ‘தெகல்கா’ புலனாய்வு பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் வீடியோ வெளியிட்டனர்.

“என் மீதான குற்றச்சாட்டில் துளி அளவும் உண்மை இல்லை” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் 3 பேர் மீதும் 153(ஏ) (இருபிரிவினரிடையே மோதல் போக்கை உருவாக்குதல்), 505(1) (ஏ)(பி) (உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல், மக்களிடையே பயத்தை உருவாக்குதல்), 505(2) அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி விரோதத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் டெல்லி சென்று ஷயான், மனோஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். விமானம் மூலம் அவர்கள் கடந்த 14-ந் தேதி அதிகாலை சென்னை அழைத்து வரப்பட்டனர்.

சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து, அவர்களிடம் 12 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களை எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சரிதா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

ஷயான், மனோஜ் 2 பேரையும் சிறையில் அடைப்பது தொடர்பாக விசாரணை இரவு 10 மணி வரை கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிவில் 2 பேரையும் சிறையில் அடைக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று மாஜிஸ்திரேட்டு சரிதா தெரிவித்தார்.

எனினும் கூடுதல் ஆவணங்களுடன் சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் 2 பேரையும் ஆஜர்படுத்துமாறு கூறிவிட்டு மாஜிஸ்திரேட்டு சரிதா புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் ஷயான், மனோஜ் ஆகியோர் இரவு 12 மணியளவில் மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் அப்போதும் போலீசார் தாக்கல் செய்த ஆவணங்கள் திருப்தி அளிக்காததால் 2 பேரையும் சிறைக்கு அனுப்ப மாஜிஸ்திரேட்டு சரிதா மறுத்துவிட்டார். 2 பேரும் ரூ.10 ஆயிரம் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக மாஜிஸ்திரேட்டு சரிதா பிறப்பித்த உத்தரவில், “ஷயான், மனோஜ் ஆகிய 2 பேரும் 18-ந் தேதி (நாளை) எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அப்போது 2 பேர் ஜாமீனுக்காக உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையடுத்து விடுவிக்கப்பட்ட ஷயானும், மனோஜும் இரவோடு, இரவாக கேரளா புறப்பட்டு சென்றனர்.

ஷயான், மனோஜ் 2 பேரும் விடுவிக்கப்பட்டது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கோடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் குறித்து ஷயான், மனோஜ் ஆகியோர் பேசிய வீடியோ காட்சி அடங்கிய சி.டி.யை இந்த வழக்கின் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் சீனிவாசன் முதலில் கோர்ட்டுக்கு எடுத்து வர மறந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த சி.டி. எடுத்து வரப்பட்டு மாஜிஸ்திரேட்டிடம் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம், “இந்த வழக்கில் 2 பேரும் இவ்வளவு அவசரமாக கைது செய்யப்பட்டது ஏன்?, நீங்கள் பதிவு செய்த வழக்கிற்கும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பேச்சுக்கும் என்ன தொடர்பு உள்ளது? இவர்கள் பேச்சால் தமிழ்நாட்டில் எந்த மாதிரியான சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது?” என மாஜிஸ்திரேட்டு சரிதா சரமாரியாக கேள்வி கனை எழுப்பியதாக கூறப்படுகிறது.

அந்த கேள்விகளுக்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை என்று தெரிகிறது. பின்னர் போலீசார் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல்கள் வழக்கின் தன்மை குறித்து விவரித்துள்ளனர். எனினும் போலீசார் பதிவு செய்த வழக்கில் திருப்தி அடையாத மாஜிஸ்திரேட்டு சரிதா, இரவு 12 மணி வரை போலீசாருக்கு அவகாசம் வழங்கினார்.

ஆனாலும் போலீசாரால் மாஜிஸ்திரேட்டு கேட்ட விளக் கங்களுக்கு பதில் அளிக்க முடியாததால் 2 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தகவல் வெளியாகி உள்ளது.

Next Story