ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்


ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்
x
தினத்தந்தி 17 Jan 2019 6:01 AM GMT (Updated: 17 Jan 2019 6:26 AM GMT)

ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் நினைவாக நினைவு கல்வெட்டு அமைக்க முதல்வருக்கு பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.

மதுரை

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று 3-வது நாளாக உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் சுமார் 1400 காளைகளை, 800 மாடுபிடி வீரர்கள் அடக்க உள்ளனர்.

ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். கார், இருசக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளி காசுகள், உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மதுரை எஸ்பி தலைமையில் 7 ஏஎஸ்பிக்கள், 15 டிஎஸ்பிக்கள் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  உள்ளனர்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து அரசுக்கு எடுத்துரைப்போம். சென்ற ஆண்டு போராட்டத்திற்கு பின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சேர்ந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்ததன் நினைவாக கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களின் நினைவாக, நினைவுச்சின்னம் அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் நினைவாக நினைவு கல்வெட்டு அமைக்க முதல்வருக்கு பரிந்துரை செய்யப்படும் என கூறினார்.

Next Story