மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் களைகட்டின 5 லட்சம் மக்கள் திரண்டனர் சென்னையில் காணும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்


மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் களைகட்டின 5 லட்சம் மக்கள் திரண்டனர் சென்னையில் காணும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2019 12:15 AM GMT (Updated: 17 Jan 2019 11:13 PM GMT)

சென்னையில் காணும் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் 5 லட்சம் மக்கள் திரண்டனர். இதனால் கொண்டாட்டம் களை கட்டியது.

சென்னை,

பொங்கல் பண்டிகை கடந்த செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டது.
அதற்கு மறுநாள் புதன் கிழமை, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

நேற்று காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலையொட்டி மக்கள் சுற்றுலா தலங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்களுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பது வழக்கம். அதன்படி நேற்று கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று மக்கள் காணும் பொங்கலை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினார்கள்.

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, பொருட்காட்சி ஆகிய இடங்களுக்கு நேற்று காலை முதலே குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து குவிய தொடங்கினார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கார், வேன், பஸ், மாட்டுவண்டி, மோட்டார் சைக்கிள்களில் படையெடுத்து வந்தனர்.

இதனால் அந்த இடங்களில் கொண்டாட்டம் களை கட்டியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதை போக்குவரத்து போலீசார் சரிசெய்தனர்.

சுற்றுலாதலங்களில் 5 லட்சம் பேர் திரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மெரினா கடற்கரைக்கு மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்திருந்ததாக அவர்கள் கூறினார்கள்.

மெரினா கடற்கரைக்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் மட்டும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

அதுமட்டுமில்லாது 13 உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, பொதுமக்களை கண்காணித்தனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், மெரினா கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை கண்காணிக்கவும் போலீசார் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். அவர்கள், தடையை மீறி குளிக்க முயன்றவர்களை கண்டித்தும், எச்சரிக்கை செய்தும் அனுப்பினர்.

மெரினா கடற்கரையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் பெற்றோருடன் வந்திருந்த சிறுவர்-சிறுமிகளுக்கு போலீசார் கையில் அடையாள ‘பேட்ஜ்’ அணிவித்தனர். அதில் குழந்தை மற்றும் பெற்றோரின் பெயர், செல்போன் எண் எழுதப்பட்டு இருந்தது. கூட்டத்தில் சிறுவர்-சிறுமிகள் காணாமல் போனால் அடையாளம் காண்பதற்கு இது பெரும் உதவியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

கடற்கரை மணற்பரப்பில் இருந்த ராட்டினங்களில் விளையாடுவது, சிற்றுண்டி கடைகளில் சாப்பிடுவது என மக்கள் பொழுதை மகிழ்ச்சியுடன் கழித்தனர். குடும்பமாக வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் சாப்பாடு கொண்டு வந்து வட்டமாக அமர்ந்து உணவு பரிமாறி சாப்பிட்டதையும் பார்க்க முடிந்தது.

இதேபோல், பெசன்ட்நகர், திருவான்மியூர் கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் கடற்கரை மணற்பரப்பில் கோ-கோ, கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.

கிண்டி சிறுவர் பூங்காவுக்கு காலை 8 மணி முதல் ஏராளமானோர் வேன்கள், மோட்டார் சைக்கிள்களில் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

பிளாஸ்டிக் தடையை அரசு அமல்படுத்தி இருப்பதால், கிண்டி சிறுவர் பூங்காவுக்குள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு செல்ல தடை விதித்து, அதற்கு மாற்றாக பேப்பர் கவர்களை வழங்கி, அதில் பொருட்களை வைத்து கொண்டு செல்ல வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

சிறுவர் பூங்காவில் இருந்த ஊஞ்சல், சறுக்கல்கள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங் களில் குழந்தைகள் ஏறி உற்சாகமாக விளையாடினார்கள். பூங்காவில் கூண்டுக்குள் இருந்த வன விலங்குகள், பறவைகளை கண்டு ரசித்தனர். பிற்பகல் நேரத்தில் குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் மரங்களின் நிழலில் இளைப்பாறி, தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுகளை பரிமாறி உண்டு மகிழ்ந்தனர்.

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் ஏராளமானோர் வந்திருந்தனர். வழக்கத்தைவிட முன்னதாகவே வண்டலூர் உயிரியல் பூங்கா நேற்று திறக்கப்பட்டது. பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

உயிரியல் பூங்காவில் உள்ள குரங்குகள், புலி, சிங்கம், யானை, நீர் யானை, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட வன விலங்குகளை மக்கள் கண்டு மகிழ்ந்தனர். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் வனத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம், கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்கா, கிண்டி காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம் மற்றும் மாநகராட்சி பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் திரையரங்குகள், தனியார் பொழுதுபோக்கு பூங்காக்களிலும் பொழுதை கழித்தனர்.

சென்னை தீவுத்திடலில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியிலும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். குடும்பத்துடனும், உறவினர்களுடனும் பொருட்காட்சியை பார்க்க வந்திருந்தவர்கள், அங்கிருந்த பல்வேறு வகையான ராட்டினங்களில் ஏறி குதூகலம் அடைந்தனர்.

மாமல்லபுரத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

கடற்கரை, சுற்றுலா தலங் களை போலவே கோவில்களிலும் நேற்று மக்கள் கூட்டம் காணப்பட்டது. சென்னையில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கடற்கரை, சுற்றுலாதலங்கள், பூங்காக்கள் மற்றும் கோவில்களுக்கு எளிதில் சென்று வரும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அதன் மூலம் மக்கள் எவ்வித சிரமும் இல்லாமல் பயணத்தை எளிதாக மேற்கொண்டனர்.

சென்னையைப் போல் திருச்சி, ஈரோடு, மதுரை, தஞ்சை, கன்னியாகுமரி போன்ற ஊர்களிலும் மக்கள் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

Next Story