மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மீதே பொய் வழக்கு போடப் பார்க்கிறார்கள்: தி.மு.க. மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு + "||" + DMK We are not afraid of intimidation Edappadi Palinasamy talk

முதல்-அமைச்சர் மீதே பொய் வழக்கு போடப் பார்க்கிறார்கள்: தி.மு.க. மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

முதல்-அமைச்சர் மீதே பொய் வழக்கு போடப் பார்க்கிறார்கள்: தி.மு.க. மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
முதல்-அமைச்சர் மீதே பொய் வழக்கு போடப்பார்க்கிறார்கள் என்றும், தி.மு.க. மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை,

எம்.ஜி.ஆர். 102-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் சாலையில் நேற்றிரவு நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பா.பென்ஜமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் இருக்காது என்று சொன்னார்கள். இந்த இயக்கம் 2 ஆக உடைந்தது. அதை ஒன்றாக சேர்த்த பெருமை ஜெயலலிதாவை சேரும். இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் இருக்கிறது. அந்த கட்சிகள் பிரச்சினை வந்தபோது உடைகிறது. அந்த இயக்கங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்ததாக வரலாறு கிடையாது. கம்யூனிஸ்டு கட்சி பிரிந்தது, பிரிந்ததாகவே இருக்கிறது. தி.மு.க. எத்தனை துண்டு, துண்டாக போனது. ஆனால் அ.தி.மு.க. 2 ஆக உடைந்தபோது, ஜெயலலிதா கட்சியை ஒன்றாக இணைத்து, இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொடுத்தார்.

ஜெயலலிதா உடனே முதல்-அமைச்சர் ஆகிவிடவில்லை. பல்வேறு சோதனைகளை கடந்து தான் முதல்- அமைச்சர் ஆனார். எதிர்க்கட்சியாக இருந்தபோது, சட்டசபையில் எம்.ஜி.ஆர். பேசும்போது மைக்கை துண்டித்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். அப்போது சொன்னார், நீங்கள் மைக்கை துண்டித்தாலும் நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு தான் போவேன் என்று பேசினார். கடைசியாக உரையை முடிக்கும் போது மீண்டும் இந்த அவையில் நான் நுழையும்போது முதல்-அமைச்சராக தான் வருவேன் என்று கூறி சென்றார். அதேபோல் முதல்-அமைச்சராக தான் அவர் சட்டசபைக்குள் நுழைந்தார். ஜெயலலிதாவும் அதேபோன்று சபதம் ஏற்று தான் சட்டசபைக்குள் நுழைந்தார்.

அந்த இருபெரும் தலைவர்களை கஷ்டப்படுத்தி, அரக்கர்கள் ஆட்சியை தி.மு.க. நடத்தியது. அதேபோன்று என் மீதும் வழக்கு போட ஆரம்பித்து விட்டார்கள். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எதற்கும் அஞ்ச மாட்டேன். கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை இந்த இயக்கத்திற்கு விஸ்வாசமாக இருந்து செயல்படுவேன். 44 ஆண்டுகள் அணி மாறாமல் ஒரே அணியில் இருந்து செயல்பட்டு வருகிறேன்.

அ.தி.மு.க.வில் தான் ஜனநாயகம் இருக்கிறது. இங்கே அடிமட்ட தொண்டன் கூட முதல்-அமைச்சர் ஆக முடியும், இது இந்த இயக்கத்தில் மட்டும் தான். மற்ற கட்சிகளில் வாரிசு அரசியல். அ.தி.மு.க. வலிமையுடனும், செழுமையாக இருப்பதற்கு காரணம் உண்மையான தொண்டர்கள் தான். இந்த இயக்கத்தை யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. இந்த ஆட்சி நீடிக்குமா? என்று கேட்டார்கள், ஒரு ஆண்டை தாண்டி 2-ம் ஆண்டிலும் அடியெடுத்து வைத்து விட்டோம். நாங்கள் எல்லாம் மக்களோடு மக்களாக பழகி வருகிறோம். உழைப்பாளர்கள் உள்ள இயக்கம். ஆட்சி கலையும் என்று அவர்கள் கண்டது எல்லாம் பகல் கனவாக போய்விட்டது. அதனால் தான் இந்த வழக்கை பிடித்து பார்க்கிறார்கள்.

எங்களை மிரட்ட பார்க்கிறார்கள். நாங்கள் ஆளுங்கட்சியாக இருக்கிறோம், முதல்- அமைச்சராக இருக்கிறோம் இப்போதே இந்த வேலை காட்டுகிறார்கள், எதிர்க்கட்சியாக இருந்தால் என்ன செய்வார்கள் நினைத்து பாருங்கள். ஒரு முதல்-அமைச்சர் மீதே ஒரு பொய் வழக்கு புனையப்படுகிறது என்று சொன்னால், இவர்கள் ஆளுங்கட்சியாக அதிகாரத்தில் இருந்தால் சாதாரண மக்களின் நிலைமை என்ன என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இன்றைக்கு கோடநாடு எஸ்டேட்டில் ஒரு நிகழ்வு. அவன் யாரு கூலிப்படையை சேர்ந்தவன். அந்தக் கூலிப்படையை சேர்ந்தவன் அங்கே கொள்ளையடிக்கப் போகிறான். போகும்போதே எப்படி சென்றேன் என்று எல்லா ஊடகத்திலேயும் சொல்லிவிட்டான். சயன் என்பவன், போனது, கொள்ளையடித்தது என்பதை எல்லாம் தெளிவாகச் சொன்னான். அவன் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறான். உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும்.

ஜெயலலிதா டிசம்பர் 5-ந் தேதி மறைந்துவிட்டார். அதுக்கு பிறகு யாருடைய கட்டுப்பாட்டில் கோடநாடு எஸ்டேட் இருந்தது. தனியார் ஒருவரிடம் இருக்கிறது. அது யாரிடம் என்பது உங்கள் அத்தனை பேருக்குமே தெரியும். அவர்களிடம் இருக்கும்போது, அங்கே ஏதாவது ஆதாரம் இருந்தால், நம்மை விட்டுவைப்பார்களா?. ஏற்கனவே படாதபாடு படுத்தினர் அந்த குடும்பத்தினர் நம்மை. இவ்வளவு ஆதாரம் இருந்தால், நம்மை என்ன பாடுபடுத்துவார்கள். இன்றைக்கு சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

அதை பொறுக்க முடியாமல் இப்படி எல்லாம் தில்லுமுல்லு செய்ய பார்க்கிறார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்று நாம் ஆராய்ந்து பார்க்கின்றபோது, இன்றைய தினம் அவர்களை ஜாமீனில் தி.மு.க.வினர் தான் எடுத்திருக்கிறார்கள். ஆகவே, அவர்களை வைத்து ஒரு தவறான கருத்தை என்மீது தெரிவிக்கும்போது, எந்த அளவுக்கு துணிந்துள்ளார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மானபங்கப்படுத்துதல், ஏமாற்றுதல், போதைப் பொருள் வைத்திருத்தல் என பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவன். இப்படி கொலை, கொள்ளை, பாலியல் வழக்கில் சிக்கியவர்களுக்கு எல்லாம் தி.மு.க.வினர் போய் ஜாமீன் கொடுக்கிறார்கள்.

இவ்வளவு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களில் தி.மு.க.வினருக்கு என்ன சம்பந்தம். ஆகவே, இன்றைக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு, இப்படி கொடுங் குற்றம் புரிந்தவர்களோடு தி.மு.க.வினருக்கு தொடர்பு இருக்கிறது. இந்த சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது, தெகல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல். அவர் ஏற்கனவே, பெரிய பெரிய தொழிலதிபர்களை மிரட்டி காசு பறிப்பதைத்தான் செய்து வந்தார். ஏதாவது படம் எடுத்து அதை வைத்து மிரட்டுவது. அந்த வகையில், இவர் செட்டப் செய்து, வீடியோ எடுத்து, இவர்களை பேட்டி கண்டு அதை எல்லா தொலைக்காட்சிக்கும் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, இதையெல்லாம் வேண்டும் என்றே திட்டமிட்டு தி.மு.க.வால் அரங்கேற்றப்பட்ட நாடகம் இது. இந்த நாடகம் இன்றைக்கு வெளுத்துப்போய்விட்டது. அவர்கள் ஜாமீன் வாங்கி கொடுப்பதில் இருந்தே இது தெரிகிறது. எனவே, தி.மு.க. வினர் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதை நாம் சட்ட ரீதியாக தவிடு பொடியாக்குவோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றைக்கும் உண்மை, நீதி, தர்மம், எப்பொழுதும் வெல்லும். துரோகம் எப்போதும் வென்ற சரித்திரம் கிடையாது. ஆகவே, நம்மை பொறுத்த வரைக்கும் சட்ட ரீதியாக எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ரூ.1000 பொங்கல் பரிசு கொடுத்ததால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல், இப்படிபட்ட ஒரு வழக்கை ஜோடிக்கப் பார்க்கிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு, பொய்யான செய்தியை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

மக்கள் சந்தோஷமாக பொங்கலை கொண்டாட வேண்டும் என்பதற்காக தான் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினோம். அதை பொறுக்க முடியாமல் தி.மு.க. வக்கீலை வைத்து கோர்ட்டில் தடை வாங்கினார்கள். ஏழைகளுக்கு கொடுப்பதையும் தடை செய்யும் கட்சி தி.மு.க. என்பதை நீங்கள் உணர வேண்டும். கோர்ட்டிற்கு நாங்கள் சென்று அந்த திட்டத்தை பெற்று வந்தோம். இந்த ஆட்சி மக்களுக்காக தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி செங்கோல் பரிசளிக்கப்பட்டது. முன்னதாக, பூந்தமல்லியில் ரூ.4 கோடியே 83 லட்சம் செலவில் கட்டப்பட்ட நகராட்சி புதிய கட்டிடத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த விழாவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், எம்.பி.க்கள் வேணுகோபால், திருத்தணி அரி, எம்.எல்.ஏ.க்கள் அலெக் சாண்டர், நரசிம்மன், ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் ஜாவித் அகமது, மாவட்ட ஜெ.பேரவை இணைசெயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் நகரமன்ற தலைவர் பூவை.ஞானம், பூந்தமல்லி ஒன்றிய துணை செயலாளர் வைதியநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவுதமன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பானுபிரசாத், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், மகளிரணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனம், நகர செயலாளர்கள் உபயதுல்லா, பட்டாபிராமன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.