அரைவினாடி காலதாமதமாக ஓடி முடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு காவலர் பணி வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


அரைவினாடி காலதாமதமாக ஓடி முடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு காவலர் பணி வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Jan 2019 9:15 PM GMT (Updated: 19 Jan 2019 8:57 PM GMT)

காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் அரைவினாடி காலதாமதமாக ஓடி முடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு வேலை வழங்க தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், ஆர்.தேவிகா என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், “2-ம் நிலை காவலர் பணிக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்துகொண்டேன். 100 மீட்டர் தூரம் ஓட்டப்பந்தயத்தை 17.50 வினாடிகளில் ஓடி முடிக்கவேண்டும். ஆனால், நான் 18.20 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தை ஓடி கடந்தேன். இதனால், என்னை தேர்வு செய்யவில்லை. உடல் தகுதி தேர்வு நடந்தபோது, நான் 8 வார கர்ப்பமாக இருந்ததால், குறித்தநேரத்தில் ஓடி முடிக்க முடியவில்லை. எனவே, 2-ம் நிலை காவலர் பணியை எனக்கு வழங்கவும், பிரசவத்துக்கு பின்னர், ஓட்டப்பந்தய தேர்வு நடத்தவும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் மனுதாரரின் கோரிக்கையை இந்த ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டால், காவலர் பணிக்கான தேர்வில் தோல்வியடைந்தவர்கள் எல்லோரும் ஐகோர்ட்டுக்கு படை எடுத்து வருவார்கள் என்றும் அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் வி.கதிர்வேலு கூறினார். ஆனால், இந்த வழக்கே கருணையின் அடிப்படையிலானது தான். உடல் தகுதி தேர்வில் 0.30 நொடி காலதாமதமாக ஓடி வந்த கர்ப்பிணி பெண்ணை தகுதி நீக்கம் செய்தது சரிதானா? என்பதை இந்த வழக்கில் முடிவு செய்யவேண்டியது உள்ளது.

இதேபோன்ற ஒரு வழக்கை விசாரித்த ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டு, மனுதாரருக்கு பிரசவம் முடிந்து, 6 வாரத்துக்கு பின்னர் போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வை அவருக்கு நடத்த வேண்டும். அதுவரை ஒரு போலீஸ் பணியிடத்தை அந்த பெண்ணுக்காக காலியாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூட, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என்று கூறுகிறது.

மேலும், மனுதாரர் தன்னுடைய கர்ப்பம் கலைந்து விடக்கூடாது என்ற ஒரு விதமான பயத்துடனே ஓடியுள்ளார். அதனால், 0.30 நொடி காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவரை தகுதி இழப்பு செய்ய முடியாது. எனவே, மனுதாரருக்கு 2-ம் நிலை காவலர் பணியை 4 வாரத்துக்குள் வழங்கவேண்டும். அவருக்கு குழந்தை பிறந்த பின்னர், காவலர் பயிற்சி வழங்கவேண்டும். கர்ப்பமும், குழந்தை பெற்றுக்கொள்வதும், வேலை வாய்ப்புக்கு தடையாக இருக்கக்கூடாது.

அதேநேரம், கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்படும் சலுகை, பெண்களின் தனிப்பட்ட வசதிக்காக என்றும் புரிந்துகொள்ளக்கூடாது. பிரசவம் என்பது அடுத்த தலைமுறையை உருவாக்குவது ஆகும். அது இல்லை என்றால், இந்த உலகமே இருக்காது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story