மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு இம்மாத இறுதியில் போக்குவரத்து தொடங்கும்


மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு இம்மாத இறுதியில் போக்குவரத்து தொடங்கும்
x
தினத்தந்தி 19 Jan 2019 10:45 PM GMT (Updated: 19 Jan 2019 9:46 PM GMT)

வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே சுரங்க மெட்ரோ ரெயில் பாதையில் பாதுகாப்பு கமிஷனர் நேற்று தன்னுடைய குழுவினருடன் சென்று ஆய்வு பணியை தொடங்கினார். தொடர்ந்து 3 நாட்கள் ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

சென்னை,

சென்னை வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சுரங்க ரெயில் பாதைப்பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்தநிலையில் வண்ணாரப்பேட்டை முதல் சென்டிரல் ரெயில் நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தன்னுடைய குழுவினருடன் வந்து நேற்று ஆய்வு செய்தார்.

முன்னதாக வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் கே.ஏ.மனோகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் ஆய்வு 3 கட்டமாக நடத்தப்படுகிறது. குறிப்பாக முதல் நாள் வண்ணாரப்பேட்டை முதல் சென்டிரல் வரை, 2-வது நாள் சென்டிரல் முதல் டி.எம்.எஸ். வரையிலும் 3-வது நாள் மெட்ரோ ரெயிலை 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி பார்த்து ஆய்வு செய்யப்படுகிறது.

ஆய்வின் போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் மாற்றங்கள் செய்ய வேண்டியது வரும். பயணிகளுக்கு போதுமான அளவு பாதுகாப்பு வசதி கள் செய்து தரப்பட்டு உள்ளதா என்பது குறித்து பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் சான்றிதழ் வழங்கப்படும். எப்போது சேவை தொடங்கும் என்பதை மெட்ரோ ரெயில் நிறுவனம் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கூறியதாவது:-

சென்னை, மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு சர்வதேச தரத்தில் நல்ல மதிப்பு இருப்பதால் பலர் கடன் வழங்க முன்வருகின்றனர். வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே ஆய்வுக்கு பின்னர் முதல் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடையும். இந்தப்பாதையில் இம்மாத இறுதியில் ரெயில் சேவை தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

மாதவரம் முதல் கோயம்பேடு மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் இடையே 52 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான பணிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி வரும் ஜூன் மாதம் கோரப்பட உள்ளது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் வரையிலான பணிக்கு கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு 5 ஆண்டுகள் கால அவகசாம் உள்ளது. இருந்தாலும் இந்தப்பணியை 2020-ம் ஆண்டு நிறைவு செய்து மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் இணையதள வசதி ஏற்படுத்துவது குறித்தும், கூடுதல் நேரம் ரெயில்கள் இயக்குவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ரெயில் கட்டணம் குறைக்க வழி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் தடுப்பு சுவரில் மோதி பயணிகள் இறந்ததற்கு கூட்டநெரிசலே காரணம் என்றும், மெட்ரோ ரெயிலை போல பெட்டிகளில் இருக்கைகளை மாற்றி அமைத்தால் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் நெரிசல் குறையும் என்றும் கே.ஏ. மனோகரன் யோசனை தெரிவித்தார்.

சென்னை மெட்ரோ ரெயில் பொதுமேலாளர் (சுரங்கம்) வி.கே.சிங், இயக்குனர் நரசிம்பிரசாத் (இயக்கம்), இணை- இயக்குனர் (மக்கள் தொடர்பு) எஸ்.பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story