இன்று முதல் வேலைநிறுத்தம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை “போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது”


இன்று முதல் வேலைநிறுத்தம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை “போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது”
x
தினத்தந்தி 22 Jan 2019 12:15 AM GMT (Updated: 21 Jan 2019 9:49 PM GMT)

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சென்னை,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர்.

அதை எதிர்த்து, மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நீதிபதிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

தங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்று கூறி, கைவிடப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்க இருப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்து உள்ளனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க இருக்கும் நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்து துறை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள், 22-ந் தேதியில் (இன்று) இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளன.

போராட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். அதன்படி, வேலைநிறுத்த போராட்டம், போராட்டம் செய்யப்போவதாக அச்சுறுத்துவது, போராட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்பது, ஆர்ப்பாட்டம் அல்லது எந்த விதத்திலுமான கிளர்ச்சியில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களின் இயல்பு செயல்பாட்டை பாதிக்கச் செய்வது ஆகியவை தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஒழுங்கு விதிகளின் 20, 22 மற்றும் 22ஏ ஆகிய பிரிவுகளை மீறுவதாகும்.

தமிழக அரசு மற்றும் டி.கே.ரங்கராஜன் இடையேயான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் 22-ம் விதி பற்றி விளக்கம் அளித்து உள்ளது. அதில், போராட்டங்களில் ஈடுபடுவதற்கு, அடிப்படை உரிமை அல்லது சட்டப்பூர்வமான உரிமை கிடையாது. அதுமட்டுமல்லாமல், போராட்டத்தை தார்மீக ரீதியில் ஏற்கவோ அல்லது அதை நியாயப்படுத்தவோ முடியாது என்றும் குறிப்பிட்டு உள்ளது.

எனவே, தமிழக அரசு ஊழியர்கள் ஒழுங்கு விதிகளை மீறக்கூடாது என்று ஒவ்வொரு துறையின் ஊழியர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூற வேண்டும்.

அரசு ஊழியர் யாராவது அலுவலகத்துக்கு வரவில்லை என்றால், அவர்கள் 22-ந் தேதி (இன்று) நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தால், அவர்கள் எடுத்துக்கொண்ட விடுமுறை காலம் அங்கீகாரமற்றது என்று கருதி, அந்த காலகட்டத்திற் காக சம்பளம் மற்றும் சலுகைகள் ஆகியவை ‘பணியில்லை, ஊதியமும் இல்லை’ என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது.

அங்கீகாரமற்ற வகையில் அலுவலகத்துக்கு வராமல் இருப்பது அரசு விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படக்கூடியது என்பதால், 17(பி) என்ற விதியின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போராட்ட காலக்கட்டத்தில் அளிக்கப்படும் தற்செயல் விடுப்பு அல்லது வேறு விடுப்பு போன்றவை (மருத்துவ விடுப்பு தவிர) அனுமதிக்கக்கூடாது. தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்கள் அல்லது தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றுபவர்கள் யாரும் இந்த போராட்டத்தில் பங்கேற்பது தெரியவந்தால் அவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்.

மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டுமானால், அதற்கு உரிய நடைமுறைகளை பின்பற்றி மருத்துவ வாரியத்திடம் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மருத்துவ விடுப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தால், அந்த மருத்துவ விடுப்புக்கான காரணங்கள் உண்மையானதுதானா? என்பதை மருத்துவ வாரியத்திடம் காட்டி சான்று பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த மருத்துவ விடுப்பு சரியான காரணங்களுக்காக விண்ணப்பிக்கப்படவில்லை என்று மருத்துவ வாரியம் கூறினால், அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கலாம்.

மருத்துவ வாரியத்தின் சான்று கிடைக்கும் வரை அந்த மருத்துவ விடுப்பு காலக் கட்டத்துக்கான சம்பளத்தை வழங்கக்கூடாது. ஒவ்வொரு அரசு துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கோ, மாணவர்களுக்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த போராட்டம் தொடர்பாக கொடுக்கப்பட்ட அறிக்கையை தினமும் (இன்று முதல்) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். அதில், எத்தனை அரசு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story