உலக முதலீட்டாளர்கள் மாநாடு, ‘மாயமான்’ காட்சி மு.க.ஸ்டாலின் அறிக்கை


உலக முதலீட்டாளர்கள் மாநாடு, ‘மாயமான்’ காட்சி மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 24 Jan 2019 11:45 PM GMT (Updated: 24 Jan 2019 7:06 PM GMT)

உலக முதலீட்டாளர்கள் மாநாடு ‘மாயமான்’ காட்சி என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2015-ம் ஆண்டு நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் படுதோல்விகளை, ஆடம்பர வரவேற்பு வளைவுகளாகவும், மிகுந்த பணச்செலவிலான விளம்பரங்களாகவும் அமைத்து, கொலை, கொள்ளை புகார் கூறப்பட்டுள்ள நிலையில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதை அரசின் செலவில் அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசார மாநாடாக மாற்றியிருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

3 லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெறும் வகையில், 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தனது நிறைவுரையில் வரைமுறையின்றி அளந்துவிட்டிருக்கும் அவர், 2019-ம் ஆண்டிற்கான முதல் பொய் வாக்குறுதியை அவிழ்த்து விட்டு தமிழக மக்களை தன்னால் இயன்ற அளவிற்கு ஏமாற்றி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்.

ஊழல் ஆட்சியின் கீழ் போடப்பட்டுள்ள இந்த 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முழு விவரங்களும் வெளிவந்த பிறகுதான் அவை செயல்வடிவம் பெறுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தங்களா? அல்லது ஜெயலலிதா நடத்திய மாநாட்டை விட அதிகமாக நான் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறேன் என்ற புளுகுக் கணக்கு காட்ட போடப்பட்ட ஒப்பந்தங்களா? என்பது தெரியவரும். கல்லூரிகள் வைத்திருப்போரையும், தொழில் நிறுவனங்கள் நடத்துவோரையும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் மிரட்டி ஒப்பந்தம் போட வைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக வரும் முதலீடுகள் பல இந்த ஒப்பந்தங்களில் உள்ளது. சாலைகளின் பல சந்திப்புகளில் வைக்கப்பட்ட ஒலிபெருக்கிகளில் முதலீடு செய்யுங்கள் என்று விளம்பரம் செய்வதற்கு பதில் தி.மு.க.வை திட்டும் ஜெயலலிதாவின் பேச்சுகள் தான் ஒலிபரப்பப்பட்டன.

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமைச்சர்கள் உல்லாசப் பயணம் மேற்கொள்ள அனுமதித்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்ததும், சென்னையில் உள்ள முச்சந்திகளிலும், சாலை சந்திப்புகளிலும் எடப்பாடி பழனிசாமியின் படத்தை வைத்து விளம்பரம் செய்து அரசின் பணத்தை வீணடித்ததும் தான் இந்த மாநாட்டின் முக்கிய சாதனை.

டாவோஸில் 2019-ம் ஆண்டின் உலகப்பொருளாதார அமைப்பின் கூட்டம் நடைபெறுகின்ற நேரத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்று தெரிந்தும் நடத்தப்பட்ட இந்த 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, ஒரு மாயமான் காட்சி என்பது மட்டுமே உண்மை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story