70வது குடியரசு தினம்; 3 பேருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல் அமைச்சர் வழங்கினார்


70வது குடியரசு தினம்; 3 பேருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல் அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Jan 2019 3:47 AM GMT (Updated: 26 Jan 2019 6:18 AM GMT)

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி 70வது குடியரசு தினத்தினை முன்னிட்டு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை 3 பேருக்கு இன்று வழங்கினார்.

சென்னை,

நாடு முழுவதும் 70வது குடியரசு தினம் இன்று கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை மெரினாவில் இன்று தேசிய கொடியை ஏற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தலைமை செயலக அதிகாரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அவர்கள் தேசிய கொடிக்கு வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன்பின்னர் குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற முப்படை வீரர்கள், காவல் துறை மற்றும் பல்வேறு படை பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்று கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் பழனிசாமி வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை சென்னையை சேர்ந்த சூர்யகுமார், தேனி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், தஞ்சையை சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய 3 பேருக்கு வழங்கினார்.  அண்ணா பதக்கம் பெற்ற 3 பேருக்கும், 1 லட்ச ரூபாய்க்கான காசோலை, தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதேபோன்று, கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் மெச்சத்தக்க வகையில் செயல்பட்ட 5 காவல் துறையினருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களை முதல் அமைச்சர் வழங்கினார்.

ஏ.டி.எஸ்.பி. வேதரத்தினம் (கடலூர்), ஆய்வாளர் பிரகாஷ் (ஓசூர்), உதவி ஆய்வாளர் ராஜேந்திரன்(அரியலூர்), சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திருக்குமார் (திருச்சி), தலைமைக் காவலர் கோபி (நாமக்கல்) ஆகியோருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

வேளாண் துறை சிறப்பு விருதை புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு செட்டியாப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சேவியருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைப்பிடித்து அதிக உற்பத்தி திறன் பெற்றதற்காக, விருது பெற்ற சேவியருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னை காமராஜர் சாலையில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.  இதனை ஆளுநர், முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்டு களித்து வருகின்றனர்.

Next Story