போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை - பள்ளிக்கல்வித்துறை


போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை - பள்ளிக்கல்வித்துறை
x
தினத்தந்தி 29 Jan 2019 10:26 AM GMT (Updated: 29 Jan 2019 11:00 AM GMT)

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

சென்னை

ஜாக்டோ–ஜியோ அமைப்பின் கீழ் கடந்த 22–ந்தேதி முதல் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் மாணவ மாணவியரின் கல்வி பாதிப்படைந்து உள்ளது.  இந்த நிலையில், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது.  எனினும் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்தனர்.

அவர்கள் பணிக்கு திரும்பவில்லை எனில் தற்காலிக ஆசிரியர்கள் அந்த இடங்களில் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இன்று மாலை வரை ஆசிரியர்கள் வராவிட்டால் அந்த இடங்களில் மட்டும் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது

இந்த நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன்  மாணவர்களின் நலன் கருதி 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வருகை தந்துள்ளனர் என கூறினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலை, உயர்நிலை பள்ளி ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

போராட்டத்தில் ஈடுபட்ட 225 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்த தலைமைச்செயலக ஊழியர்கள் 8 பேரை பணி இடைநீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நிதித்துறையை சேர்ந்த 4 பேர், சட்டப்பேரவைச் செயலகம், வேளாண்துறை, பொதுப்பணித்துறை, உள்துறைகளை சேர்ந்த தலா 1 நபர்கள் என மொத்தம் 8 பேரை பணி இடைநீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் 97 விழுக்காட்டினர் பணிக்கு திரும்பியதால் கல்வித்துறை  தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

அப்படி திரும்பாதவர்கள் மீது 17 பி என்ற பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து உள்ளது.

போராட்ட நாட்களுக்கு சம்பளம் கிடையாது.   22-ம் தேதி முதல் கணக்கெடுக்கப்படும் சனி, ஞாயிற்றுக்கிழமையும் சம்பளம் கிடையாது.  வரும் 31-ம் தேதி வழங்க இருந்த சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

Next Story