பணியில் சேர இன்று வருவோருக்கு பணியிட மாறுதல்; பள்ளி கல்வித்துறை நடவடிக்கை


பணியில் சேர இன்று வருவோருக்கு பணியிட மாறுதல்; பள்ளி கல்வித்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Jan 2019 6:10 AM GMT (Updated: 30 Jan 2019 6:10 AM GMT)

பணியில் சேர இன்று வருவோருக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்துவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 22ந்தேதியில் இருந்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தினால் அரசு பணிகள் மற்றும் கல்வி பணிகள் பாதிப்படைந்து உள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களில் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களது பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என பள்ளி கல்வி துறை எச்சரிக்கை செய்தது.

இந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள், நேற்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளி கல்வி துறை அறிவுறுத்தியிருந்தது.  இதனையடுத்து 80 விழுக்காடு ஆசிரியர்கள் இரவு 7 மணிக்குள் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பணியில் சேராத ஆசிரியர்கள் மீது  நடவடிக்கை எடுப்பதுடன், இன்று பணியில் சேர வந்தால் பழைய பள்ளிக்கு பதிலாக வேறு பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

Next Story