சிறப்பாக பணிபுரிந்த 197 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, முதல்-அமைச்சர் விருது எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


சிறப்பாக பணிபுரிந்த 197 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, முதல்-அமைச்சர் விருது எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 31 Jan 2019 11:45 PM GMT (Updated: 31 Jan 2019 7:07 PM GMT)

சிறப்பாக பணிபுரிந்த 197 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, முதல்- அமைச்சர் பதக்கங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சென்னை, 

சிறப்பாகவும், மெச்சத்தகுந்த வகையிலும் பணிபுரிந்த போலீஸ்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு ஜனாதிபதி, முதல்-அமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குதிரைப்படை போலீசாரும், மோட்டார் சைக்கிள் போலீஸ் படையினரும் அணிவகுத்து வரவேற்றனர்.

போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் சென்று எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். மொத்தம் 204 சீருடை பணியாளர்கள் பதக்கங்கள் பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 7 பேர் வரவில்லை. 197 பேர் பதக்கங்களை பெற்றனர். முதல்-அமைச்சரிடம் இருந்து 31 பேர் பதக்கம் பெற்றனர்.

விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஓய்வு பெற்ற போலீசாரின் நலனை கருத்தில் கொண்டு, ‘ஓய்வு பெற்ற காவல் துறையினருக்கான நலவாரியம்’ அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் அறிவுரைகளை பின்பற்றி, பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இதுவரையில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 440 கண்காணிப்பு கேமராக்கள் தமிழ்நாடு முழுவதும் பொருத்தி குற்றங்கள் நடைபெறுவது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் பணியாற்றும் நீங்கள் மாறுபட்ட சிந்தனையோடு குற்றங்களுக்கு தீர்வு காண வேண்டும். இதை கூறும்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு காட்டில் நிறைய யானைகள் வசித்து வந்தன. மழையின்மை காரணமாக யானைகளுக்கு குடிக்க நீர் கிடைக்கவில்லை. யானை கூட்ட தலைவன், யானைகளை அழைத்து எங்காவது தண்ணீர் கிடைக்கிறதா? என்று பார்க்க சொன்னது.

அப்போது பக்கத்தில் உள்ள காட்டில் நிறைய நீர்நிலைகள் இருப்பதாக சில யானைகள் தலைவனிடம் கூறின. உடனே எல்லா யானைகளும் அந்த காட்டை நோக்கி விரைந்தன. அந்த காட்டில் முயல்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தன. வழியில் பல முயல்கள் யானைகளின் காலடியின் சிக்கி மடிந்தன. அந்த காட்டிலுள்ள தண்ணீரை யானைகளின் கூட்டமே மொத்தமாக அருந்தியது. முயல்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

யானைகள் அக்கம்பக்கத்திலுள்ள யானைகளையும் அந்த காட்டிற்கு அழைத்து வந்தன. யானைகளின் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வர முயல்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்தன. அப்போது ஒரு முயல், நான் இந்த யானை கூட்டம் இந்த பக்கம் வரவிடாமல் செய்துவிடுவேன் என்று கூறி கிளம்பியது.

அந்த முயல், யானைகளிடம் நெருங்கினால் ஆபத்து என்பதை உணர்ந்து, சற்று உயரமான இடத்திலிருந்து பேசியது. நான் சந்திர பகவான் அனுப்பிய தூதுவன். முயலின் தோற்றத்தில் வந்துள்ளேன். என்னுடைய ஆதரவில் வாழும் முயல்கள் உங்களால் நசுங்கி இறந்திருக்கின்றன, எனக்குச் சொந்தமான இந்த ஏரியில் நீங்கள் நீர் அருந்தக் கூடாது. முயல்களுக்கு இனிமேல் எந்த தீமை செய்தால் உங்களுக்கு அழிவுக்காலம் வந்து விட்டது என்று அறியவும். நீங்கள் ஒழுங்காக நடந்து கொண்டால், நான் நல்லவனாக இருப்பேன். இல்லையேல் உங்களை ஒழித்துக் கட்டுவதை தவிர வேறு வழியில்லை என சந்திர பகவான் உங்களிடம் தெரிவிக்க சொன்னார் என்று கூறியது.

உடனே யானைக் கூட்ட தலைவன், என்னை சந்திரனிடம் கூட்டிச் செல்லுங்கள். நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது. உடனே அந்த முயல், சந்திர பகவானைக் காட்டுகிறேன் என்று கூறி, அந்த யானைக் கூட்டத் தலைவனை அழைத்துச் சென்றது.

செல்லும் வழியில் உள்ள ஒரு ஏரியில் சந்திரனின் உருவம் தெரிந்தது. சமயோசிதமாக அந்த முயல், ஏரியில் தெரிந்த சந்திர பிம்பத்தை யானைக்கு காட்டியது. உடனே யானை, நான் நீராடிவிட்டு சந்திர பகவானை தரிசிக்கிறேன் என்று கூறி தண்ணீரில் இறங்கியது. யானையின் கால் பட்டதால் தண்ணீர் கலங்கியது. இதனால் சந்திரனின் பிம்பம் பல உருவங்களாக தெரிந்தது.

அதைக் கண்ட முயல், யானையிடம், நீங்கள் தண்ணீரை கலக்கியதால் சந்திர பகவானுக்கு உங்கள் மீது கோபம் வந்து விட்டது. அதனால் தான் அவரது உருவம் சிதறி காணப்பட்டது என்றது.

இதனால் பயந்து போன யானைக் கூட்ட தலைவன், நானும், எனது கூட்டமும் இந்த ஏரியிலே தண்ணீர் குடிக்க மாட்டோம். இந்த காட்டிலேயே இருக்க மாட்டோம் என்று கூறி விட்டு கிளம்பியது.

ஒரு சிறிய முயல் தனது மாறுபட்ட சிந்தனையினால் பலம் கொண்ட யானைக் கூட்டத்தையே காட்டை விட்டு விரட்டியது. அதுபோல் நீங்களும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், குற்ற நிகழ்வுகளை தடுப்பதற்கும் மாறுபட்ட முறையில் சிந்தித்தால் நல்ல நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பதக்கம் பெற்றவர்கள் பெயர் வருமாறு:-

ஊர்காவல் படை கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ்குமார், திருப்பூர் போலீஸ் கமிஷனர் க.மனோகரன், டி.ஐ.ஜி.க்கள் வனிதா (வேலூர்), கார்த்திகேயன் (கோவை), க.பவானீசுவரி (கடலோர பாதுகாப்பு குழுமம்), பி.கே.செந்தில்குமாரி (ரெயில்வே), ஆசியம்மாள் (தொழில்நுட்ப பிரிவு), ராதிகா (லஞ்ச ஒழிப்பு பிரிவு), லலிதா லட்சுமி (திருச்சி), துணை கமிஷனர்கள் மல்லிகா (சென்னை மத்திய குற்றப்பிரிவு), விமலா (சென்னை உளவுப்பிரிவு), சூப்பிரண்டுகள் சாமுண்டீஸ்வரி (சி.பி.சி.ஐ.டி.), லட்சுமி (லஞ்ச ஒழிப்பு பிரிவு), கண்ணன் (மாநில உளவுப் பிரிவு), பிரவீன் அபினபு (சி.பி.சி.ஐ.டி.), சரவணன் (கடலூர்), கண்ணம்மாள் (லஞ்ச ஒழிப்பு), மணி (போலீஸ் பயிற்சி), பாஸ்கரன் (தேனி), சண்முகம் (லஞ்ச ஒழிப்பு), உதவி ஐ.ஜி. முத்தரசி உள்ளிட்ட 31 பேர் இந்த பட்டியலில் அடங்குவார்கள்.

தென்சென்னை கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சிறந்த பொதுசேவைக்காக முதல்-அமைச்சரின் விருதை பெற்றார்.

தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோரிடம் 166 பேர் பதக்கங்களை பெற்றனர்.

சிறந்த புலனாய்வு பணிக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.கிளாஸ்டின் டேவிட் முதல்-அமைச்சரின் பதக்கத்தை பெற்றார். அவருக்கு ரூ.25 ஆயிரம் வெகுமதி வழங்கப்பட்டது. இவர் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் எம்.பி.எட். படித்துள்ளார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள அம்பலக்காலை ஆகும்.

விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், போலீஸ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். நிறைவில் போலீசாரின் கலைநிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.

Next Story