‘பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான தன்னம்பிக்கை அளிக்கும் பட்ஜெட்’ பட்ஜெட் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதற்கான தன்னம்பிக்கை பட்ஜெட் என்று மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை,
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைத்து துறையை சார்ந்தவர்களும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பாதுகாக்கப்பட்டு இருக்கிறார்கள். வசதியான ஒரு வாழ்க்கை முறையை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த அரசாங்கம் செயலாற்றி வருகிறது என்பதை இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது.
வீடு கட்டுபவர்களுக்கு மானியம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை, வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக நிர்ணயம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
4½ ஆண்டுகளாக செய்யாதது ஏன்?
வருமான வரி உச்சவரம்பு உயர்த்தியதை கடந்த 4½ ஆண்டுகளாக ஏன் செய்யவில்லை? என்று கேட்கிறார்கள். இன்று வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது. பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு போலி நிறுவனங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு நேர்மையாக வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம் வரி ஏய்ப்பவர்கள் தான் அதிகமாக இருந்தார்கள். இப்போது வரி கட்டுபவர்கள் தான் அதிகம் உள்ளார்கள். அவ்வாறாக வரி கட்டுபவர்களுக்கு இந்த அரசு பாதுகாப்பாக இருக்கிறது. இதன் காரணமாக 12 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. எனவே இதுவரை தியாகம் செய்த தொழிலாளர்களுக்கான வருமானவரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக ஆக்கப்பட்டு இருக்கிறது.
ரூ.3 லட்சம் கோடி வாராக்கடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 30 லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் மீட்டு எடுக்கப்பட்டு இருக்கிறது. இவையெல்லாம் மக்களுக்கான திட்டங்களாக வர இருக்கிறது.
வாய்பந்தல்....
இதுபோன்ற சாமானியர்களுக்கான பட்ஜெட்டை இதுவரை காங்கிரஸ் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தாக்கல் செய்து இருக்கிறாரா?. இந்த பட்ஜெட்டை அவர் விமர்சனம் செய்கிறார். அவர் வாய்பந்தல் மட்டும் தான் போடுவார். அதிகாரத்தில் இருக்கும் நாங்கள் எங்களால் செய்ய முடியும் என்று அறிவித்து இருக்கிறோம்.
மொத்தம் 21 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 14 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மோடி பிரதமரான பிறகு, அமைக்கப்பட்டது. மத்திய அரசின் பட்ஜெட்டினால் கம்யூனிஸ்டுகளும், மற்ற கட்சிகளும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். மக்களால் பிரமாண்டமாக வரவேற்கப்படக்கூடிய பட்ஜெட் இது.
தன்னம்பிக்கை பட்ஜெட்
வர இருக்கும் தேர்தலை எப்படி சந்திக்கப்போகிறோம் என்று எதிர்க்கட்சிகள் முற்றிலுமாக பதற்றத்தில் இருக்கிறார்கள். இப்போது தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் இடைக்கால பட்ஜெட் பா.ஜ.க. மீது குறை சொல்ல முடியாத, நிறைவான பட்ஜெட்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்பதற்கான தன்னம்பிக்கை பட்ஜெட். பா.ஜ.க.வுக்கு தன்னம்பிக்கையையும், எதிர்க்கட்சிகளுக்கு அவநம்பிக்கையையும், மக்களுக்கு முழு நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கும் பட்ஜெட் இது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story