சி.பி.எஸ்.இ. நடத்தும் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பதை ரத்து செய்யுங்கள் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்


சி.பி.எஸ்.இ. நடத்தும் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பதை ரத்து செய்யுங்கள் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 4 Feb 2019 2:30 AM IST (Updated: 4 Feb 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.எஸ்.இ. நடத்தும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கும் தேர்வு முறையை ரத்து செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை,

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துடன், கட்சியின் உயர்நிலைக்குழு, ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு மற்றும் அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டமும் நடந்தது. இந்த நிகழ்விற்கு ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்தும், தி.மு.க. கூட்டணியில் எத்தனை இடங்கள் கேட்கலாம் என்பது குறித்தும் மாவட்ட செயலாளர்கள், உயர்நிலை குழு, அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்களிடம் வைகோ கருத்து கேட்டார். ம.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்தும், வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெறுவது குறித்தும், தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.விடம் பேசுவதற்கு ம.தி.மு.க. சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து வன்மத்துடன் பல வகையில் வஞ்சித்து வரும் மத்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பிரதமர் நரேந்திர மோடி 10-ந் தேதி திருப்பூருக்கும், 19-ந் தேதி கன்னியாகுமரிக்கும் வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. அவரின் வருகையை எதிர்த்து வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போராட்டம் நடத்தப்படும்.

* நாடாளுமன்றத்தில் 10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி இருப்பது வரலாற்று பிழையாகும் என்பதை ம.தி.மு.க. சுட்டிக்காட்டுவதுடன், சமூக நீதியை பாதுகாக்க தேவையான சட்ட நடவடிக்கைகள், போராட்டங்களுக்கு திராவிடர் கழகம், தி.மு.க. உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகள், அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

* சி.பி.எஸ்.இ. நடத்தும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கும் தேர்வு முறையை ரத்து செய்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story