தேசிய, மாநில கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


தேசிய, மாநில கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 4 Feb 2019 12:15 AM GMT (Updated: 3 Feb 2019 11:03 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் புதிய அணி உருவாகும் என்று கூறிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கூட்டணி அமைப்பது குறித்து தங்களுடன் தேசிய மற்றும் மாநில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

சென்னை,

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதால், தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

தமிழகத்தில் எத்தனை அணிகள் போட்டியிடும்? எந்த அணியில் எந்த கட்சி இருக்கும்? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. என்றாலும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து கட்சிகளின் தலைவர்கள் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், அண்ணா நினைவுதினத்தையொட்டி சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சமபந்தி விருந்தில் துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க.வில் நாடாளுமன்ற தேர்தல் விருப்ப மனு பெறுவது நாளை (அதாவது, இன்று) தொடங்குவது குறித்து...?

பதில்:- நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யாரெல்லாம் போட்டியிட விரும்புகிறார்களோ? அவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு எந்த கட்சியாவது இசைவு தெரிவித்து இருக்கிறதா?

பதில்:- அ.தி.மு.க.வுடன் தோழமை உணர்வுள்ள கூட்டணி கட்சிகள், அரசியல் ரீதியான கட்சிகள், மாநில-தேசிய கட்சிகள் எல்லாம் இணைந்து கூட்டணி அமைப்பது குறித்து விருப்பம் தெரிவித்து உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது பரம ரகசியம். அந்த ரகசிய முடிச்சு அவிழ்க்கப்பட்டவுடன் உங்களுக்குத்தான் (பத்திரிகையாளர்கள்) முதலில் தெரிவிக்கப்படும்.

கேள்வி:- அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமையுமா? அல்லது தேசிய கட்சிகள் தலைமையில் கூட்டணி அமையுமா?

பதில்:- தமிழக அரசியலில் அ.தி.மு.க. தான் இன்றைக்கு பலம் வாய்ந்த பெரிய கட்சியாக இருக்கிறது. ஆகவே எங்களுடைய தலைமையில் தான் கூட்டணி அமையும்.

கேள்வி:- ‘பாரதீய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்காது’ என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகிறார். ஆனால் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிறாரே?

பதில்:- அ.தி.மு.க.வில் அவரவர் கருத்தை சொல்வதற்கு அவரவருக்கு உரிமை இருக்கிறது. இருப்பினும் தலைமை நிர்வாகிகள் ஒன்றுகூடி நல்ல முடிவு எடுக்கும்போது அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். அந்த நிலைதான் அ.தி.மு.க. வில் 1972-ம் ஆண்டில் இருந்து இன்று வரை நீடிக்கிறது. ஆகவே ஒருமித்த கருத்துடன் எங்களுடைய கூட்டணி அமையும்.

கேள்வி:- கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று பாரதீய ஜனதா தரப்பில் கூறப்பட்டு வருகிறதே?

பதில்:- நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். எங்களுடன் ஒத்த கருத்துடைய மாநில கட்சிகளாக இருந்தாலும் சரி, தேசிய கட்சிகளாக இருந்தாலும் சரி, அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Next Story