நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி உறுதியாகிவிட்டதா? அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு


நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி உறுதியாகிவிட்டதா? அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Feb 2019 5:00 AM IST (Updated: 5 Feb 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி சேருவது உறுதியானது போல தெரிவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் அதை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை மாநிலக் கட்சிகளின் கையே ஓங்கியிருப்பதால், அ.தி.மு.க., தி.மு.க.வை நம்பியே தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் இருக்க வேண்டியுள்ளது.

அந்த வகையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி வருகிறது. அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணையும் என்று தெரிகிறது. மேலும், ஒரு சில சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் ஐக்கியமாகலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம் பெறும் என்று தெரிகிறது.

ஆளுங்கட்சிகளான அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே கூட்டணி மலர்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது. இதை சூசகமாக தெரிவித்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், “தேசிய, மாநில கட்சிகள் எல்லாம் இணைந்து கூட்டணி அமைப்பது குறித்து விருப்பம் தெரிவித்துள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது பரம ரகசியம்” என்று கூறினார்.

அதேபோல், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, “கூட்டணிக்கான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். கூட்டணிக்கு நாம் தான் தலைமை தாங்கப்போகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில், அ.தி.மு.க.வுக்கு 24 தொகுதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. பா.ஜ.க.வுக்கு 8, பா.ம.க.வுக்கு 4 (புதுச்சேரியும் சேர்த்து), தே.மு.தி.க. - த.மா.கா.வுக்கு தலா 2 என தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

முதலில் இந்தக் கூட்டணியில் பா.ம.க. இருப்பதால், தே.மு.தி.க. இணைய யோசித்தது. இந்த நிலையில், தே.மு.தி.க. துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீசுடன் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ போனில் தொடர்பு கொண்டு கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். தற்போது, தே.மு.தி.க.வும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில், பா.ம.க.வுக்கு வாக்கு வங்கியுள்ள இடங்களில் தே.மு.தி.க. போட்டியிடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இந்தக் கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி என்றும் அடையாளம் காணப்பட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில், பா.ஜ.க.வுக்கு தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, நெல்லை, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளும், பா.ம.க.வுக்கு தர்மபுரி, ஆரணி, அரக்கோணம், புதுச்சேரி தொகுதிகளும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும் ஒதுக்கப்படும் என தெரிகிறது. தே.மு.தி.க. - த.மா.கா.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட இருக்கிறது.

கடந்த முறை பா.ம.க. சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அந்த கட்சியின் இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் இந்த முறை ஆரணி தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

தி.மு.க. கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு தொடங்காத நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடியும் தருவாயில் உள்ளது. நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையின் எதிர்மறையான கருத்துகளால், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி அமையுமா?, அமையாதா? என்று குழப்பமான சூழ்நிலை நிலவிய நிலையில், தற்போது கூட்டணி உறுதியாகி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ .தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில், தென்சென்னை தொகுதியில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனும், ஸ்ரீபெரும்புதூரில் இல.கணேசனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், திருப்பூரில் வானதி சீனிவாசனும், சிவகங்கையில் எச்.ராஜாவும் களம் காண இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், கருப்பு முருகானந்தம், கே.எஸ்.நரேந்திரன் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு நெல்லை தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Next Story