ரூ.6 ஆயிரம் கொடுப்பதால் விவசாயிகள் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை மு.க.ஸ்டாலின் பேச்சு


ரூ.6 ஆயிரம் கொடுப்பதால் விவசாயிகள் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 5 Feb 2019 4:45 AM IST (Updated: 5 Feb 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி.யில் இருந்து உரம், பூச்சி மருந்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், ரூ.6 ஆயிரம் கொடுப்பதால் விவசாயிகள் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மதுரை,

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றியம் தணக்கன்குளம் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல், யார் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறார்கள்? மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் அது எல்லாம் எங்களைவிட உங்களுக்கு நன்றாக தெரியும்.

இன்னும் சொல்லப்போனால் பிரதமர் நரேந்திரமோடியை நல்லவர் என்று சொன்னால், அவரைவிட மிகவும் நல்லவர் எடப்பாடி பழனிசாமி. நீங்களே சிரிக்கிறீர்கள். இருவரையும் நல்லவர் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டீர்கள். காரணம் அந்த அளவுக்கு ஒரு மோசமான ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏற்கனவே, பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து இருக்கக்கூடிய மோடி இப்பொழுது மீண்டும் பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு மீண்டும் ஒரு பொய்யைச் சொல்லி இருக்கின்றார். என்ன பொய் என்று கேட்டால், விவசாயிகளுடைய வருமானத்தை 2 மடங்கு உயர்த்தப்போகிறேன் என்று புதிதாக ஒரு கதை விட்டிருக்கின்றார். மீண்டும் ஒரு பெரிய பொய்யை சொல்லி இருக்கின்றார். விவசாயினுடைய கோவணத்தை அவிழ்த்துவிட்டு ஓட விட்டவர்கள், மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள். அது உங்களுக்கு தெரியும்.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றார். நீங்கள் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அங்கு பா.ஜ.க. உள்ளே நுழைய முடியாது, அதனால் மோடிக்கு ஆத்திரம் வந்து மம்தா பானர்ஜியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, பல அக்கிரமங்களை செய்து கொண்டிருக்கின்றார்.

விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்தால் அதில் எந்த பயனும் கிடையாது, பலனும் கிடையாது, நன்மையும் கிடையாது என்று பிரதமர் மோடி சொல்லி இருக்கின்றார். விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதே தவறு என்ற கருத்தைச் சொல்லி இருக்கின்றார்.

மோடி பட்ஜெட்டில் ஒரு பயங்கரமான காமெடி பண்ணியிருக்கிறார். அது என்னவென்று கேட்டீர்களென்றால், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கொடுக்கப்படும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.6 ஆயிரத்தை மொத்தமாக கொடுக்கமாட்டார். 3 தவணையாக 2 ஆயிரமாக கொடுப்போம் என பட்ஜெட்டில் அறிவித்திருக்கின்றார்.

விவசாயிகளுக்கு அன்றாடம் தேவைப்படக்கூடிய உரத்தினுடைய விலை 6 மாதத்தில் 20 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே ரூ.6 ஆயிரம் கொடுப்பதினால் அந்தப் பிரச்சினை தீர்ந்துவிடப்போகிறதா என்று கேட்டால் விவசாயிகளுடைய பிரச்சினை நிச்சயம் தீரப்போவது இல்லை, அது உண்மை. விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருக்கிறது என்று சொன்னால், ஜி.எஸ்.டி.யில் இருந்து உரத்திற்கு, பூச்சி மருந்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். அதுதான் விவசாயிகளுக்கு அவர்கள் செய்யக்கூடிய புண்ணியமாக இருக்கும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story