நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபையில் காலியாக இருக்கும் 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தயார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபையில் காலியாக இருக்கும் 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தயார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 10 Feb 2019 12:15 AM GMT (Updated: 9 Feb 2019 6:47 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபையில் காலியாக இருக்கும் 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறி உள்ளார்.

சென்னை, 

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக சென்னை மாநகராட்சியில், 913 இடங்களில் 3,754 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு மாதிரி வாக்கை மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் செலுத்தி, ஒப்புகை சீட்டு எந்திரம் மூலம் வாக்கு சரிபார்க்கும் செயல் முறையை விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி வாக்காளர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு செய்து காட்டும் நிகழ்ச்சி நேற்று அண்ணா நகர் மண்டலம், செனாய் நகரில் உள்ள மத்திய வட்டார அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமை தாங்கினார்.

அப்போது அவர், மாதிரி வாக்குப்பதிவு செய்து காட்டும் எந்திரங்கள் கொண்ட விழிப்புணர்வு வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செனாய் நகரில் அமைக்கப்பட உள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு, அங்கிருந்த வாக்காளர்களுக்கு வாக்கு அளிப்பதன் அவசியம் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடு மற்றும் ஒப்புகை சீட்டு எந்திரத்தின் செயல்பாடு குறித்தும் விளக்கினார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

மாதிரி வாக்குப்பதிவு செய்து காட்டும் எந்திரங்கள் கொண்ட வாகனத்தில் 4 ஊழியர்கள் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று அங்கு வரும் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது பற்றி தெரிவிப்பார்கள். மேலும் அங்கிருக்கும் வாக்காளர்கள் அந்த வாகனத்தில் உள்ள எந்திரங்களில் மாதிரி வாக்களித்து, ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரத்தின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் வாக்காளர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். மேலும் மாதிரி வாக்களித்தவர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கும் மற்ற வாக்காளர்களுக்கும் இது குறித்து விளக்கிக் கூறலாம்.

தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனிடம் வழங்கப்பட்ட மனு குறித்து இந்திய தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் நேரத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

தேர்தல் கமிஷன் உத்தரவிட்டால், நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளோம்.

தற்போது கூட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும். www.nvsp.in என்ற இணையதளத்தில் பெயர் உள்ளதா? என்று சரி பார்த்துவிட்டு, பெயர் இல்லை என்றால் அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு வாக்குச்சாவடி மையத்தில் என்ன இருக்கிறது என்பதை தெரியப்படுத்த பெரிய முயற்சியை இந்திய தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. இதன்மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பயன்பாடு குறித்தும், ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரத்தின் செயல்பாடு குறித்தும் தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரத்தில் இருந்து வரும் சீட்டு பொதுமக்களிடம் வழங்கப்படாது.

அந்த சீட்டு, வாக்காளர் பதிவு செய்த வாக்கு சரியான வேட்பாளருக்குத்தான் பதிவாகியுள்ளதா என்பது குறித்து 7 வினாடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் அங்குள்ள ‘சீல்’ வைக்கப்பட்ட பெட்டியில் தானே விழுந்து விடும். ஒப்புகை சீட்டு எந்திரத்தை 913 மையங்களுக்கு கொண்டு சென்று வாக்காளர்கள் மாதிரி வாக்குப்பதிவு செய்து பார்க்கப்படும். 10 நாட்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு கொண்டு சென்று விளக்கம் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்கள் ஆர்.லலிதா, டாக்டர் சுபோத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர்(தேர்தல்) எ.பெருமாள் மற்றும் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story