மாநில செய்திகள்

கோடநாடு காவலாளி கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தீபு, பிஜின்குட்டி கைது + "||" + Kodanadu guilty murder, robbery case Thibu, Pijinkutty Arrested

கோடநாடு காவலாளி கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தீபு, பிஜின்குட்டி கைது

கோடநாடு காவலாளி கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தீபு, பிஜின்குட்டி கைது
கோடநாடு காவலாளி கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தீபு, பிஜின்குட்டி ஆகியோரை நீலகிரி போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷயான், மனோஜ், மனோஜ் சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ் சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் டெல்லியில் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் முன்னிலையில் ஷயான், மனோஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கோடநாடு விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த 18-ந் தேதி அரசு வக்கீல் பாலநந்தகுமார் ஷயான், மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஊட்டி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வடமலை, இருவரும் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார். அவர்கள் சார்பில் வக்கீல் ஆஜராகி இருவரும் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஷயான், மனோஜ் இருவரும் 29-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இருவரும் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து கடந்த 2-ந் தேதி வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

மீண்டும் 2-ந் தேதி நீதிபதி முன்பு கோடநாடு வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கில் சம்மந்தப்பட்ட 9 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். உதயகுமார் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் ஆஜராகவில்லை என வக்கீல் சிவக்குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு 8-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் 8-ம் தேதி மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் மனோஜ்சாமி, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி ஆகிய 6 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள். ஷயான், மனோஜ், திபு, பிஜின் ஆகிய 4 பேர் ஆஜராகவில்லை.

ஷயான், மனோஜ் சார்பில் வக்கீல்கள் ஆனந்தன், ரவிக்குமார் ஆகியோர் ஆஜராகி அவர்கள் ஆஜராக 2 நாட்கள் அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். திபு, பிஜின் சார்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜராகி திபு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாலும், பிஜின் பாலக்காட்டில் வேறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதாலும் அவர்கள் ஆஜராக முடியவில்லை என்று மனுத்தாக்கல் செய்தார். அப்போது நீதிபதி, வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் சரியாக கோர்ட்டில் ஆஜராவது இல்லை என்று தெரிவித்தார். பின்னர் நீதிமன்றத்தில் வேறு வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பின்னர் மதியம் 3 மணிக்கு மீண்டும் கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி வடமலை, ஷயான், மனோஜ் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டு உள்ள ஜாமீனை ரத்து செய்வதாக கூறினார். கோர்ட்டில் ஆஜராகாத பிஜின், திபு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாகவும், பிஜின், திபு, ஷயான், மனோஜ் ஆகிய 4 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தும் உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. 

இந்தநிலையில், கோடநாடு காவலாளி கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தீபு, பிஜின்குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்த தீபு, பிஜின்குட்டி ஆகியோரை கைது செய்து நீலகிரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்கள் நாளை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.