ரூ.2,467 கோடி செலவில் சென்னை விமான நிலையம் நவீன மயமாக்கும் பணி மோடி தொடங்கி வைத்தார்


ரூ.2,467 கோடி செலவில் சென்னை விமான நிலையம் நவீன மயமாக்கும் பணி மோடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Feb 2019 11:15 PM GMT (Updated: 10 Feb 2019 9:26 PM GMT)

ரூ.2,467 கோடி செலவில் சென்னை விமான நிலையம் நவீன மயமாக்கும் பணியை மோடி திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பழைய காமராஜர் மற்றும் அண்ணா விமான நிலையங்களை இடித்துவிட்டு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையத்தை இயக்கக்கூடிய வகையில் நவீன வசதிகளுடன் கட்டுமான பணிகள் செய்ய திட்டமிடப்பட்டன.

இதற்காக ரூ.2,467 கோடி செலவில் விமான நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகளை திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி, நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

அதேநேரத்தில் சென்னை பன்னாட்டு முனையத்தில் இந்த காணொலி காட்சி ஒளிப்பரப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமசந்திரன், விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி, விமான நிறுவனங்களின் அதிகாரிகள், மத்திய தொழிற்படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி கூறியதாவது:-
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நவீன மயமாக்கல் பணியை பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 97 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பில் அமையும் சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் ஆண்டுக்கு 16 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய வகையில் இருக்கும். உச்சக்கட்ட நேரத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் 6,900 பயணிகளை கையாள முடியும். புதிய முனையங்களில் பாதுகாப்பு தரம் உயர்த்தப்படும்.

சுயபரிசோதனை வசதி, தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த நவீன வசதி முனையங்களில் 140 விமான சோதனை மையம், பன்னாட்டு மற்றும் வருகை பகுதியில் 108 குடியுரிமை சோதனை மையம், 22 சுங்க சோதனை மையம், 26 பாதுகாப்பு எக்ஸ்ரே கருவிகள், 78 உடல் சோதனை அறைகள், விமானத்தில் பயணிகள் ஏறும் 15 பாலங்கள், 2 ஆயிரம் கார்கள், 2 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 4 முக்கிய பிரமுகர்கள் மற்றும் பயணிகள் தங்கும் ஓய்வகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.

இந்த பணிகள் 2 கட்டமாக செய்யப்படும். முதலில் காமராஜர் உள்நாட்டு முனையம் இருந்த பகுதியில் கட்டுமான பணிகள் முடிந்ததும் அங்கு பன்னாட்டு வருகை பகுதி முழுமையாக மாற்றப்படும். அதன்பின்னர் அண்ணா பன்னாட்டு முனையம் இடிக்கப்பட்டு 2-வது கட்ட பணிகள் நடக்கும்.

இந்த பணிகள் டிசம்பர் 2021-ம் ஆண்டு முடிவடையும். சென்னை விமான நிலையத்தில் சராசரியாக 35 ஆயிரத்தில் இருந்து 45 ஆயிரம் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் 55 ஆயிரம் வரை பயணிகள் வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலேயே டெல்லி, சென்னை விமான நிலையங்களில்தான் அதிகமான பயணிகள் வந்து செல்வதாக அறியப்பட்டு உள்ளது.

பன்னாட்டு வருகை பகுதியை பன்னாட்டு புறப்பாடு பகுதியாக மாற்றி இந்த மாத இறுதிக்குள் செயல்படத்தொடங்கும். இதனால் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி விரைவாக விமானத்துக்கு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சென்னையில் ஒரு நாளுக்கு 260 விமானங்கள் புறப்பாடும், 260 விமானங்கள் வருகையுமாக உள்ளது. வருங்காலத்தில் இந்த விமான சேவை அதிகரிக்க உள்ளது. வெளிநாட்டு விமான நிறுவனங்கள் கட்டமைப்பு வசதி குறைவாக உள்ளதால் வேறு விமான நிலையங்களுக்கு செல்கின்றன. நவீன வசதிகளுடன் கூடிய புதிய முனையம் வந்ததும் அந்த சேவைகள் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேரும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story