பெண் போலீஸ் அதிகாரியின் பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


பெண் போலீஸ் அதிகாரியின் பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 11 Feb 2019 9:30 PM GMT (Updated: 11 Feb 2019 9:10 PM GMT)

ஐ.ஜி. மீது பெண் போலீஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன்? என்று அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை, 

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைத்து தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதையடுத்து பாலியல் புகாரை விசாரித்த இந்த கமிட்டி, இந்த புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பரிந்துரைத்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், குற்றச்சாட்டுக்கு ஆளான ஐ.ஜி. வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் கொடுத்த பெண் போலீஸ் சூப்பிரண்டு கோர்ட்டில் ஆஜராகி இருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி மீது மற்றொரு ஐ.பி.எஸ். அதிகாரி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாலியல் புகார் கொடுத்துள்ளார். 6 மாதங்களாகியும் இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மிகப்பெரிய துரதிருஷ்டவசமானது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு பாரபட்சம் இல்லாமல், நடுநிலையுடன் செயல்படவேண்டும். புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் புகாரை நிராகரிக்கவேண்டும். ஆனால், 6 மாதங்களாக எந்த நடவடிக்கை இல்லை என்பதை ஏற்க முடியாது’ என்றார்.

பின்னர், இதுபற்றி சி.பி. சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் முன்பு ஆஜராகி புகார்தாரர் (பெண் போலீஸ் சூப்பிரண்டு) வாக்குமூலம் கொடுத்தால் என்ன? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வக்கீல், வாக்குமூலம் அளிக்க அவர் தயாராக இருப்பதாக கூறினார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

பின்னர், ‘எத்தனை பெண்கள் இதுபோன்ற புகார்களை கொடுக்க முன்வருவார்கள்? என்னை பொறுத்தவரை இதுபோன்ற சூழ்நிலை வேறு எந்த பெண்களுக்கும் வரக்கூடாது. இதுபோன்ற புகார்களை கொடுக்க தைரியமாக பெண்கள் முன்வரும்போது, அதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் உள்ளது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘நான் புகாரின் உண்மை தன்மை குறித்து எதுவும் பேசவில்லை. உதாரணத்துடன் உயர் அதிகாரிகள் மீது சில பெண்கள் வேறு ஏதாவது ஒரு காரணத்துக்காக பாலியல் புகார் கொடுக்கலாம்.

சட்டத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தலாம். ஆனாலும், ஒரு பெண் துணிந்து புகார் செய்யும்போது, அதன் மீது உடனடியாக விசாரணை நடத்தவேண்டும்’ என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். பின்னர் விசாரணையை நாளை (புதன்கிழமைக்கு) தள்ளிவைத்தார்.

Next Story