மாநில செய்திகள்

வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரெயிலில் அலைமோதிய பயணிகள் கூட்டம் + "||" + Washermanpet Between tms Metro Rail Passenger meeting

வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரெயிலில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரெயிலில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே நேற்று மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மின்கம்பம் பழுது காரணமாக ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவித்தனர்.
சென்னை, 

சென்னை வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த வழித்தடத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை, மண்ணடி, ஐகோர்ட்டு, சென்டிரல் மெட்ரோ 2-வது தளம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு ஆகிய ரெயில் நிலையங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

மெட்ரோ ரெயில் சேவையை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக சென்னையின் அனைத்து வழித்தடத்திலும் மெட்ரோ ரெயிலில் நேற்று இலவசமாக பயணம் செய்யலாம் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்தது.

இதனால் நேற்று மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ் இடையே பலர் பயணம் செய்தனர். தற்போது பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டாலும் மாணவர்கள், பொதுமக்கள் தனியார் நிறுவன ஊழியர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பயணித்தனர்.

ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் மெட்ரோ ரெயிலில் ஏறியதை காண முடிந்தது. குழந்தைகள், சிறுவர் மற்றும் சிறுமிகள் குதூகலத்துடன் பெற்றோருடன் பயணம் மேற்கொண்டனர். சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களில் இருப்பது வெளிநாடுகளில் இருப்பது போன்ற அனுபவத்தை தருவதாக பலரும் கூறினார்கள்.

இந்தநிலையில் சைதாப்பேட்டை-சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை 9 மணி அளவில் திடீரென மின்சார கம்பிகளில் பழுது ஏற்பட்டது. இதனால் டி.எம்.எஸ் - சின்னமலை இடையே முதல் நடைமேடையில் மின்சாரம் தடை ஏற்பட்டதால் ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமானநிலையம் நோக்கி வந்த ரெயில்கள் டி.எம்.எஸ். ரெயில் நிலையத்தில் இருந்து சின்னமலை வரை ஒரு வழிப்பாதையில் இயக்கப்பட்டது. மறுமார்க்கமாக விமானநிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி வந்த ரெயில்களை சின்னமலை-டி.எம்.எஸ். இடையே முறையாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையம் வழியாக விமானநிலையம் நோக்கி சென்ற ரெயில்கள் டி.எம்.எஸ். ரெயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, மீண்டும் வண்ணாரப்பேட்டைக்கே திரும்பின.

அதேபோல் விமானநிலையத்தில் இருந்து சென்டிரல் நோக்கி வந்த ரெயில்கள் சின்னமலை ரெயில் நிலையத்தில் பயணிகளை இறக்கவிட்டு மீண்டும் விமான நிலையம் நோக்கி சென்றன. ஆங்காங்கே உள்ள ரெயில் நிலையங்களில் இறக்கிவிடப்பட்டதால் எங்கு நிற்கிறோம் என தெரியாமல் பயணிகள் குழப்பத்தில் தவித்தனர்.

டி.எம்.எஸ். மற்றும் சைதாப்பேட்டை அருகில் சுரங்கத்தின் நடுவே நடுவழியில் ஒரு சில ரெயில்கள் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகளுக்கு திகில் அனுபவம் ஏற்பட்டது.

‘ரெயில் இயக்கும் பணியில் தடை ஏற்பட்டுள்ளதால் அனைத்து ரெயில்களும் காலதாமதமாக இயக்கப்படும். தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்று டி.எம்.எஸ். ரெயில் நிலையத்தில் அறிவிப்பு வெளியானது. அதேபோல் ரெயில் நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்படும் நேரங்களில் ரெயில்களும் வரவில்லை. ஏமாற்றமடைந்த பயணிகள் தாங்கள் ஏறிய இடத்திலேயே கொண்டு விட்டு விடுங்கள் என்று ஊழியர்களிடம் தெரிவித்தனர். சேவை தொடங்கி 2-வது நாளிலேயே பழுது ஏற்பட்டு உள்ளதே என்று சிலர் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொறியாளர்கள் சைதாப்பேட்டை- சின்னமலை இடையே பழுதான மின்சார கம்பிகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நண்பகல் 1 மணிக்கு மின்சார கம்பிகள் சரி செய்யப்பட்டு, வழக்கமான போக்குவரத்து தொடங்கியது.

சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன்கள் சிக்னல் கிடைக்காததால் யாருடனும் போனில் பேச முடியவில்லை என மெட்ரோ ரெயில நிறுவன அதிகாரிகளிடம் பலர் புகார் அளித்தனர். அதற்கு அதிகாரிகள் ‘இதுபற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சிக்னல் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் பாதுகாப்பு கமிஷனர் நேரில் ஆய்வு
வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான சோதனை ஓட்டம் இன்று (சனிக் கிழமை) முதல் 3 நாட்கள் நடக்கிறது. இதை மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமிஷனர் நேரில் ஆய்வு செய்கிறார்.
2. வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே பொங்கல் தினத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குமா? பாதுகாப்பு கமிஷனர் 10-ந்தேதி ஆய்வு
டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் சேவை பொங்கல் தினத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் வருகிற 10-ந்தேதி ஆய்வு மேற்கொள்கிறார்.