மாநில செய்திகள்

கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + Concerning the Will be announced shortly Wedding show MK Stalli Speech

கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
நல்ல கூட்டணியை தோழமை கொண்டு அமைத்து இருக்கிறோம் என்றும், அங்கீகாரத்தோடு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,

பாலிமர் டி.வி.யின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான பி.வி.கல்யாணசுந்தரம்- அருள்ஜோதி தம்பதியினரின் மகன் கே.வருணுக்கும், திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வும், இந்திரா கல்வி குழுமத்தின் தலைவருமான வி.ஜி.ராஜேந்திரன்-இந்திரா தம்பதியினரின் மகள் டாக்டர் ஆர்.பிரியதர்ஷினிக்கும் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கூட்டரங்கில் நேற்று திருமணம் நடந்தது.

இந்த திருமணத்துக்கு தலைமை தாங்கி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். அவருடன் மனைவி துர்கா, மருமகன் சபரீசன் ஆகியோரும் வந்திருந்தனர். அதைத்தொடர்ந்து திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் வரவேற்று பேசினார்.

இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், காந்தி, வாகை சந்திரசேகர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்த மணவிழா சுயமரியாதை உணர்வோடு, சீர்திருத்த முறையில் நடைபெற்று இருக்கிறது என்று பொருளாளர் துரைமுருகன் சொன்னார். இது சுயமரியாதை, சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல தமிழ் திருமணம்.

இதுபோன்ற திருமணத்தை நடத்தி வைக்கும்போது, விமர்சனம் செய்கின்ற நிலை உருவாகி இருக்கிறது. ஒரு காலத்தில் இதுபோன்ற சீர்திருத்த திருமணம் நடைபெறும் என்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரம் 1967-க்கு முன்பு இல்லாமல் இருந்தது.

1967-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பேற்ற அண்ணா, முதல் தீர்மானமாக சீர்திருத்த திருமணம் அனைத்தும் சட்டப்படி செல்லும் என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்தார். இன்று நடைபெறும் இதுபோன்ற திருமணங்கள் சட்டபடி செல்லுபடியாகும் என்ற நிலைமையில் தான் நடந்து கொண்டு இருக்கிறது.

வி.ஜி.ராஜேந்திரனை யாரும் இதுவரை தவறாக பேசி பார்த்தது இல்லை. எல்லோரையும் தன்வசம் வைத்து இருக்கும் நல்ல ஆற்றலாளர்.

பாலிமர் டி.வி.யும், வி.ஜி.ராஜேந்திரன் குடும்பத்தினரும் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். தி.மு.க.வுக்கு பலன் கிடைக்க போகிறது என்று கனிமொழி சொன்னார். தி.மு.க.வுக்கு பலன் கிடைக்கிறதோ? இல்லையோ? நாட்டு மக்களுக்கு பலன் கிடைக்க வேண்டும்.

ஆகவே தி.மு.க.வை பொறுத்தவரையில் நல்ல கூட்டணியை தோழமை கொண்டு அமைத்து இருந்தாலும், அது முறையோடு அங்கீகாரத்தோடு எந்த அளவில் அமைந்து இருக்கிறது என்று விரைவில் அறிவிப்போம். அதேநேரத்தில் இன்னொரு கூட்டணியும் அமைவதை நாட்டில் பார்த்து கொண்டு இருக்கிறோம். ஆளுங்கட்சி அ.தி.மு.க., யார் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்ற செய்தி வருகிறது.

21 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து நடத்தக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. 6 மாதத்துக்கு மேல் எந்த தொகுதியிலும் எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பது சட்டம். அதையெல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலோடு, இந்த தேர்தலையும் நடத்துவதற்கு தடுப்பதற்கான சூழ்ச்சிகளை மோடி தலைமையிலான அரசு செய்து கொண்டு இருக்கிறது. இதை நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறேன்.

பிரதமர் மோடி திருப்பூரில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய், நாட்டுப்பண் இசைப்பது தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் ஏற்கனவே மோடி மதுரைக்கு வந்த போதும், அது பின்பற்றப்படவில்லை. திருப்பூர் நிகழ்ச்சிகளிலும் அது பின்பற்றப்படவில்லை. இது வேதனைக்குரிய ஒன்று.

பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழை பற்றி பேசுகிறார். தமிழிலே பேசுகிறார். திருவள்ளுவரை மேற்கோள் காட்டி குறளை சொல்லி பேசுகிறார். மக்களை ஏமாற்றுகிற நிலையிலே மோடி இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சாட்சிகள் தேவையில்லை. எனவே நாட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலைகளை எல்லாம் மக்கள் பார்த்து வரக்கூடிய தேர்தலிலே ஒரு நல்ல விடிவுகாலத்தை தமிழகத்திலும், மத்தியிலும் ஏற்படுத்தி தருவதற்கு துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கூட்ட அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், பென்ஜமின், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிர மணியன் ஆதித்தன், தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் பிரபு, விஜயகுமார், கவிஞர் வைரமுத்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.