கிராமங்களில் தெருவிளக்கு, குடிநீர் பிரச்சினைகள் எப்படி தீர்க்கப்படுகிறது சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்


கிராமங்களில் தெருவிளக்கு, குடிநீர் பிரச்சினைகள் எப்படி தீர்க்கப்படுகிறது சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
x
தினத்தந்தி 12 Feb 2019 8:31 PM GMT (Updated: 12 Feb 2019 8:31 PM GMT)

கிராமங்களில் தெருவிளக்கு, குடிநீர் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பது பற்றி சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

சென்னை, 

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் நேற்று பேசும்போது, கிராமங்களில் குடிநீர், தெருவிளக்கு பிரச்சினைகள் இன்னும் நிலவுவதாக குற்றம்சாட்டினார்.

அதற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆவேசமாக பதிலளித்து பேசினார். அப்போது தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், அ.தி.மு.க. ஆட்சி நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு பேசினார். மேலும், இதுபற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்றும் தி.மு.க.வுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவால் விடுத்தார்.

அமைச்சர் கூறிய சில கருத்துகளுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு எழுந்தது. புதிதாக போடப்படும் தெருவிளக்குகளும் விரைவில் செயல் இழந்துவிடுகின்றன என்று ஆஸ்டின் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “டெண்டர் சட்டப்படி தான் தெரு விளக்குகள் வாங்குகிறோம். வாங்கப்படும் எல்.இ.டி. விளக்குகளுக்கு 5 ஆண்டு உத்தரவாதம் உண்டு. விளக்கு ஏதாவது பழுதானால் அதை அந்த நிறுவனம் தான் சீர்செய்யுமே தவிர, அரசு ஏதும் செலவழிக்காது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி மீதமாகிறது” என்றார்.

இந்த பிரச்சினையில் குறுக்கிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் வருமாறு:-

ஏற்கனவே மாவட்ட கலெக்டர்களை எல்லாம் நேரடியாக அழைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று அவர்களிடம் 3 மணி நேரம் தலைமைச் செயலகத்தில் வைத்து குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் அவற்றை நிவர்த்திசெய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தேன்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 2, 3 ஒன்றியத்திற்கு ஒரு துணை கலெக்டர் நியமிக்கப்பட்டு, ஆங்காங்கே நேரடியாக கிராமங்களுக்கு சென்று, அந்த கிராமத்திலே என்னென்ன குறைகள் இருக்கின்றன? என்று கேட்டறிந்து, அதை நிவர்த்திசெய்ய வேண்டும் என்று அவர்களுக்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்ல, இரவில் எந்த விளக்கு எரியவில்லை, காலையில் எந்தெந்த விளக்கு எரிகிறது என்பதையெல்லாம் நீங்களும் சென்று பாருங்கள்.

பல்வேறு துறைகளில் இருக்கிற துணை கலெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று, அங்கே தெருவிளக்குகள் எரியவில்லை என்றால் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் 10 சதவீதம் தெருவிளக்கை இருப்பு வைத்திருக்க வேண்டும், விளக்கு பழுதானால் உடனடியாக மாற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

குடிநீர் குழாய்கள் எல்லாம் சரிசெய்ய வேண்டும், எந்தெந்த பகுதியிலே குடிநீர் வரவில்லையோ அதையெல்லாம் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. வடக்கு மாவட்டங்களில் எல்லாம் பருவமழை பொய்த்ததன் காரணமாக வறட்சி நிலவுகிறது. அப்படிப்பட்ட மாவட்டங்களுக்கெல்லாம் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

அங்கெல்லாம் உடனடியாக குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்து, அதற்கு தேவையான நிதியையும் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எங்கேயும் குடிநீர் பிரச்சினை இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நிதியுதவி செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்கெல்லாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்காங்கே இருக்கிற ஒரு துறையை சேர்ந்த அதிகாரிகள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு மாதத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, மாவட்ட கூட்டத்தை கூட்டி அங்கெல்லாம் என்னென்ன பிரச்சினைகள் நிலவுகிறது? என்பதை எல்லாம் ஆராய்ந்து, அதை உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறார்கள். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Next Story