கருணாநிதி குறித்த விமர்சனம்: நடிகை குஷ்பு ‘திடீர்’ பல்டி ‘அவரே என் தெய்வம்’, என டுவிட்டரில் பதிவு


கருணாநிதி குறித்த விமர்சனம்: நடிகை குஷ்பு ‘திடீர்’ பல்டி ‘அவரே என் தெய்வம்’, என டுவிட்டரில் பதிவு
x
தினத்தந்தி 12 Feb 2019 9:00 PM GMT (Updated: 12 Feb 2019 8:39 PM GMT)

கருணாநிதி தமிழரா என்று விமர்சனம் செய்த நடிகை குஷ்பு திடீர் பல்டி அடித்துள்ளார். ‘கருணாநிதி என் தெய்வம், தி.மு.க. என் வீடு’ என்று தற்போது அவர் கூறியுள்ளார்.

சென்னை, 

காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்புவிடம், சமீபத்தில் ஒரு வார பத்திரிகை சார்பில் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு நடிகை குஷ்பு பதில் அளித்தார்.

அப்போது ‘தமிழராக இல்லாத ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று சீமான் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே?’, என்ற ஒரு கேள்விக்கு, கருணாநிதியை தொடர்புபடுத்தி நடிகை குஷ்பு சில வரிகளை உதிர்த்தார். “கருணாநிதி தமிழர் கிடையாது. எம்.ஜி.ஆர். தமிழகத்தை சேர்ந்தவர் அல்ல. ஜெயலலிதா கர்நாடகத்தில் இருந்து வந்தவர். அப்படி இருக்கும்போது இதைப்பற்றி பேசுவது தவறானது. மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம்”, என்று அவர் தெரிவித்தார்.

நடிகை குஷ்புவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேக வேகமாக பரவியது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்ற அரசியல் ஜாம்பவான்களை தமிழகத்தை சாராதவர்கள் என்று அவர் குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக தி.மு.க.வில் தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய குஷ்பு, அக்கட்சியின் ஆணி வேரான கருணாநிதியையே தமிழர் இல்லை என்று கூறியது, அக்கட்சியினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

‘எப்படி இதுபோல விமர்சனம் செய்யலாம்? ஏறிய ஏணிப்படியை மறக்கலாமா?’, போன்ற வார்த்தைகளை தி.மு.க.வினர் கோபத்துடன் கேட்க தொடங்கினர். சமூக வலைதளங்களிலும் குஷ்புவுக்கு வசைப்பாட்டு விழுந்து வருகிறது.

இந்தநிலையில் குஷ்பு நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தி.மு.க.வில் இருந்தே என் அரசியல் பயணம் தொடங்கியது. அதுவே என் வீடு. என் பள்ளிக்கூடம். என் கோவில். மறைந்த கலைஞர் கருணாநிதி என் தெய்வம். தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் தேடினாலும் கருணாநிதி போல உயர்ந்த ஒரு தலைவரை கண்டுபிடிக்க முடியாது. அவர் தமிழக மக்களின் புகழுக்குரியவர் ஆவார். இவ்வாறு டுவிட்டரில் குஷ்பு பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவும் நேற்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. ஒருநாள் திட்டுவதும், மறுநாள் புகழுவதும் என மாறி மாறி பல்டி அடிப்பது ‘அரசியலில் சகஜமப்பா’, என்று சமூக வலைதளங்களில் ‘மீம்ஸ்’களும் பறக்கின்றன. இன்னொரு தரப்பினர் ‘காங்கிரஸ் கட்சிக்கு இதை சொல்லியா தரவேண்டும். இதெல்லாம் அவர்களுக்கு கைவந்த கலை’, என்று விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

சமீபத்தில் ‘தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வரவேண்டும்’ என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்ஆனால் மறுநாளே ‘தி.மு.க.வை கமல்ஹாசன் விமர்சனம் செய்தது தெரியாது. கூட்டணியில் ஒரு கட்சியை சேர்ப்பது குறித்து தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியே முடிவு செய்யும்’, என்று அறிக்கை விட்டு அவரும் பல்டி அடித்ததை யாரும் மறந்துவிட முடியாது.

Next Story