விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தது யார்? சட்டசபையில் காரசார விவாதம்


விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தது யார்? சட்டசபையில் காரசார விவாதம்
x
தினத்தந்தி 12 Feb 2019 10:30 PM GMT (Updated: 12 Feb 2019 8:53 PM GMT)

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தது யார்? என்பது தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.

சென்னை, 

சட்டசபையில் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ. பொன்முடி பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

பொன்முடி (தி.மு.க.):- கடந்த 8 ஆண்டுகளாக கரும்பு, நெல் கொள்முதல் சரிவர நடக்கவில்லை. மிக குறைந்த அளவே கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. கரும்பு உற்பத்தியை 1000 டன்னாக உயர்த்துவோம் என்கிறீர்கள். ஆனால் 250 டன்னாக குறைந்திருக்கிறதே?

அமைச்சர் தங்கமணி:- வறட்சி காரணமாக கரும்பு உற்பத்தி குறைந்தது. இயற்கை சீற்றம், வறட்சிக்கு யார் என்ன செய்ய முடியும்?. எனவே தான் முதல்-அமைச்சர் வறட்சியால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். மழை பெய்திருந்தால் உற்பத்தி அதிகரித்திருக்கும்.

அமைச்சர் காமராஜ்:- நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு 1,840 ரூபாய் என அறிவித்திருக்கிறோம். மாநில அரசு ஊக்கத்தொகையாக 50 ரூபாய் தருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் ஊக்கத்தொகையாக மட்டும் மொத்தம் 631 கோடி ரூபாய் இந்த அரசு வழங்கி இருக்கிறது.

பொன்முடி:- வறட்சி 8 ஆண்டுகளாக இருக்கிறதா?. 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சவுக்கு மரம் இப்போது 3 ஆயிரம் ரூபாய்க்கு தான் விற்கப்படுகிறது. காகித ஆலைகள் பேப்பர் தயாரிக்க கூழ்களை வெளிநாட்டில் இருந்து வாங்குகிறார்கள். தொழிற்சாலைகள் சவுக்கை வாங்காதது தான் இதற்கு காரணம்.

அமைச்சர் எம்.சி.சம்பத்:- கஜா புயலில் ஏராளமான சவுக்கு மரங்கள் விழுந்தன. அப்போது அரசு 5,450 ரூபாய் விலையில் அந்த மரங்களை வாங்கினோம். மொத்தம் 1 லட்சம் டன் சவுக்கு மரம் கொள்முதல் செய்யப்பட்டது.

பொன்முடி:- தி.மு.க. ஆட்சியில் 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்தோம். நீங்கள் அப்படி எதுவும் செய்தீர்களா?

அமைச்சர் செல்லூர் ராஜூ:- தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி 2 மடங்காக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு வருமானம் 3 மடங்காக இருக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சியில் 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்ததாக கூறுகிறார்கள். அது சரி அல்ல. ரூ.5,318 கோடி கடன் தான் தள்ளுபடி செய்யப்பட்டது.

2017-2018-ம் ஆண்டில் 10 லட்சத்து 64 ஆயிரம் விவசாயிகளுக்கு 6 ஆயிரத்து 220 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படும்போது அவர்களது நண்பனாக இருந்து ஏராளமான நன்மைகளை செய்திருக்கிறோம். வறட்சிக்காக நிவாரணம் வழங்கிய ஒரே ஆட்சி இந்த ஆட்சி தான். வெள்ளம் வந்தபோது நிவாரணம் வழங்கினோம். பயிர் இழப்பு காப்பீட்டு தொகையாக 1 கோடியே 1 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.14 ஆயிரத்து 515 கோடி வழங்கி இருக்கிறோம். டிசம்பர் வரை 85.62 சதவிகிதம் பேர் கடனை திருப்பி செலுத்தி இருக்கிறார்கள். விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். கூட்டுறவு வங்கி கடனை தள்ளுபடி செய்ய கேட்கவில்லை.

துரைமுருகன்(தி.மு.க.):- விளக்கத்தை பிரசுரமாக்க கூடாது. தவறான தகவலை தரக்கூடாது. தி.மு.க. ஆட்சியில் 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழை நாங்கள் நேரடியாக வழங்கியிருக்கிறோம்.

அமைச்சர் செல்லூர் ராஜூ:- புள்ளி விவரத்தை சரியாக கொடுக்க வேண்டும். புள்ளி விவரத்தை வைத்து தான் நான் கூறுகிறேன்.

துரைமுருகன்:- அதிகாரிகளிடம், தி.மு.க. ஆட்சியில் நடந்ததை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

மு.க.ஸ்டாலின்:- தி.மு.க. ஆட்சியில் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி என அறிவித்தது உண்மை. கணக்கெடுக்கும்போது கூடுதல், குறைவு இருக்கலாம். கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? இல்லையா?.

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- தி.மு.க. ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடி தள்ளுபடி என்று அறிவித்தீர்கள். ஆனால் அறிவித்தை முழுவதும் கொடுக்கவில்லை. குறைவாகத்தான் கொடுத்தீர்கள். அதை தான் அமைச்சர்கள் இங்கே கூறினார்கள். விவசாயிகளுக்கு அரசு ஏதும் செய்யவில்லை என்றும் உறுப்பினர் பொன்முடி கூறினார். வறட்சி வந்தபோது வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு ஜெயலலிதாவின் அரசு. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு மூலம் 3,527 கோடி ரூபாய் பெற்று தந்தோம். விவசாயிகளுக்கு தொடர்ந்து நன்மைகளை செய்து வருவது இந்த அரசு தான்.

அமைச்சர் செல்லூர் ராஜூ:- உங்கள் (தி.மு.க.) ஆட்சியில் ஒரே குடும்பத்துக்கு 89 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்தீர்கள், விவசாயிகளை கைதூக்கி விட ஜெயலலிதா அனைத்தும் செய்திருக்கிறார். இதனை விவசாயிகளே பாராட்டி இருக்கிறார்கள். குறுவை தொகுப்பு, பம்பா தொகுப்பை வழங்கியிருக்கிறோம். 7 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்ததை உங்களால் நிரூபிக்க முடியுமா?.

சக்கரபாணி (தி.மு.க.):- திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- வறட்சியிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கத்தான் காப்பீட்டு திட்டத்திலே விவசாயிகளை இடம்பெற செய்திருக்கின்றோம். ஆகவே, வறட்சி வருகின்றபோது, இப்படி விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற போது, இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக அவர்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவதற்கு தான் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, 2016-2017-ல் காப்பீட்டு நிறுவனத்தால் 20 கோடியே 97 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையாக 22,942 விவசாயிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 16 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

2018-2019-ம் ஆண்டு நடப்பாண்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 23 லட்சம் விவசாயிகள் 34 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி பரப்பில் பதிவு செய்துள்ளார்கள். எதற்காக சொல்கிறேன் என்றால், இயற்கை சீற்றத்தினால், பருவமழை பொய்க்கின்ற போது, வறட்சியால் ஏற்படுகின்ற பாதிப்பு விவசாயிகளை பாதிக்கின்றது. ஆகவே, அப்படிப்பட்ட பாதிப்பிலிருந்து விவசாயிகள் மீள்வதற்காக காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story