‘தினசரி கதாநாயகன் சின்னதம்பி’ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு


‘தினசரி கதாநாயகன் சின்னதம்பி’  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2019 10:21 PM GMT (Updated: 12 Feb 2019 10:21 PM GMT)

தினசரி கதாநாயகன் சின்னதம்பியை காட்டுக்குள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

சென்னை, 

சட்டசபையில் கேள்வி நேரத்தில், வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திக்கேயன் (தி.மு.க.), ‘வேலூர் தொகுதி, சத்துவாச்சாரி, பெருமுகை மற்றும் சலவன்பேட்டை ஆகிய மலைப் பகுதிகளில் மரக்கன்றுகள் நட அரசு ஆவன செய்யுமா?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர்,வேலூர் என்றால் ‘வெயிலூர்’ என்று எல்லோருக்கும் தெரியும். கடந்த ஆண்டு கூட வேலூரில் 110 டிகிரி அளவுக்கு வெயில் தாக்கம் இருந்தது. அதனால்தான், மலைப்பகுதியிலே செடி நட்டு மரம் வளர்த்தால் வெயிலூர், நிழலூராக மாறும் என்றார்.

இதற்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

வேலூர் சட்டசபை தொகுதிக்குள் அடங்கிய சத்துவாச்சாரி, பெருமுகை மற்றும் சலவன்பேட்டை ஆகிய மலைப் பகுதிகளில் கோட்டமலை மற்றும் பாலமதி காப்புக்காடுகள் உள்ளன. இந்த மலைப்பகுதிகளில் மண்வளத்திற்கேற்ப மரம் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ஆல், அரசு, மகோகனி, வேங்கை போன்ற 30 ஆயிரம் பல்வகை மரக்கன்றுகள் நடப்படும். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களின் மூலம் மரம் வளர்ப்பு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் 2011-க்கு முன்னர் 21.76 சதவீதமாக இருந்த பசுமைப் போர்வை 2017-ல் 23.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 181 சதவிகிதமாக உயர்ந்து அகில இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் திகழவும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிக்கவும், பொதுமக்கள் மற்றும் இளம் தலைமுறையினரான மாணவ-மாணவியரிடம் மரம் வளம் வளர்ப்பு குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வன உயிரினங்கள் வாழ்வதற்கான சுற்றுச்சூழல் சம நிலையினை பராமரிப்பு மற்றும் உறுதி செய்யவும், வனக்கொள்கையின்படி நாட்டின் மொத்தப் பரப்பில் மூன்றில் ஒரு பங்கினை வனப் பரப்பாகவும், பல்வேறு மரம் வளர்ப்புத் திட்டங்கள் கடந்த 5 ஆண்டு காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு, இப்போதும் அது தொடர்ந்து நடைபெறுகிறது.

வேலூர் மட்டுமல்ல, அனைத்துப் பகுதிகளுக்கும் மரங்களை நட நல்ல சூழ்நிலை உருவாகியிருக்கிறது. 2011-2012 முதல் 2016-2017 வரை ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் மரக் கன்றுகள் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின், மூலமாக 2016-2017-ம் ஆண்டில் 1,800 ஹெக்டேர் பரப்பளவில் மரக் கன்றுகள் நடவுப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிறைய மரம் வளர்கின்ற தன்மையின் அடிப்படையில், தேக்கு மரம் உற்பத்தி திட்டம், சந்தன மரம் வளர்த்தல் திட்டம், செம்மரம் வளர்த்தல் திட்டம், இலவச மரக் கன்றுகள் வழங்குதல் திட்டம் போன்ற பல திட்டங்கள் மூலமாக மரங்கள் நடும் பணி செய்யப்படுகிறது. இதற்காக ரூ.54 கோடி மதிப்பீட்டில் பனை மரம், சவுக்கு, தேக்கு மற்றும் அலையாத்தி ஆகிய மரங்கள் நடவும், புயலினால் பாதிக்கப்பட்டு விழாத அளவுக்கு நல்ல மரங்களை நடுவதற்கான உத்தரவை முதல்-அமைச்சர் வழங்கியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


அதனை தொடர்ந்து சின்னதம்பி யானையின் செயல்பாடு குறித்து கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்) கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

தினசரி கதாநாயகன் சின்னத்தம்பி யானை. அது இன்றைக்கு எங்கே போகிறது, எங்கே வருகிறது என்பதை டி.வி.களில் சொல்கிறார்கள். அதில் ஒன்றும் ரகசியமே இல்லை. கோர்ட்டு தீர்ப்பிற்கு பிறகு சின்னத்தம்பி என்கிற யானையைப் பிடித்து, காட்டுக்குள் விடுவதுதான் கடைசியான நிலை.

எந்த மிருகத்தையும் துன்புறுத்த வேண்டிய கட்டாயம் இந்த அரசுக்கு இல்லை. மக்களுக்குப் பொருந்தாத மிருகங்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை.

பன்றிப் பிரச்சினை குறித்து எங்கெங்கு அதிகம் என்று சொல்கிறார்களோ, அவற்றை வனத் துறையின் மூலமாக சுட்டுப் பிடிப்பதற்குரிய உத்தரவை ஏற்கனவே முதல்- அமைச்சர் மூலமாக இங்கே அறிவித்திருக்கிறோம். அதன்படி இதுவரையில் கேட்டவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சுடுகின்ற வேலைகள் எங்களுக்கு வாய்க்கவில்லை, அப்படி வந்தால் தகவலை சபைக்குத் தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story