டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து: திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி


டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து: திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 12 Feb 2019 11:19 PM GMT (Updated: 12 Feb 2019 11:19 PM GMT)

டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் நடந்த தீ விபத்தில் திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருப்பூர், 

டெல்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று அதிகாலை நடந்த தீ விபத்தில் 17 பேர் இறந்துள்ளனர். இதில் திருப்பூரை சேர்ந்த பனியன் ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் அடங்குவார்கள். இது குறித்த தகவல்கள் வருமாறு:-

திருப்பூர் பிச்சம்பாளையத்தில் தனியார் பனியன் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் அவினாசி ராக்கியாபாளையம் வெற்றிவேல் நகரை சேர்ந்த சுகுமாரன் என்பவரின் மகன் அரவிந்த்(வயது 40), கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் செந்தில் நகரை சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் நந்தகுமார்(33) ஆகியோர் மெர்சண்டைசராக பணியாற்றி வந்தனர்.

இவர்கள் 2 பேரும் டெல்லியில் நடந்த பனியன் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 10-ந் தேதி திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் கூட்டத்தில் பங்கேற்று விட்டு இரவு கரோல் பாக் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4½ மணி அளவில் அந்த ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அரவிந்த், நந்தகுமார் ஆகிய 2 பேரும் எதிர்பாராதவிதமாக தீ விபத்தில் சிக்கினார்கள். தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அரவிந்த், நந்தகுமார் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

தீபத்தில் பலியான கோவை வாலிபர் நந்தகுமாருக்கு சாரதா பேபி (23) என்ற மனைவியும், ரித்தேஷ் என்கிற மகனும் உள்ளனர். பலியான அரவிந்த்துக்கு தேவிகா என்ற மனைவியும், பூஜித் (11) என்ற மகனும், கனிஷ்கா (8) என்ற மகளும் உள்ளனர்.

இருவரின் உடல்களையும் டெல்லியில் இருந்து திருப்பூர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

Next Story