சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ. தொலைவில் வங்க கடலில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று வானிலை மையம் தகவல்


சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ. தொலைவில் வங்க கடலில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 12 Feb 2019 11:35 PM GMT (Updated: 12 Feb 2019 11:35 PM GMT)

சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ. தொலைவில் வங்க கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவுமில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை, 

சென்னையில் இருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ. தொலைவில் வங்க கடல் பகுதியில் நேற்று காலை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. வட அந்தமான், போர்ட்பிளேர் மற்றும் சென்னையில் சில இடங்களில் லேசான அதிர்வு உணரப்பட்டதாக சமூக வலைதளங்கள் மூலம் வேகமாக தகவல்கள் பரவியது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது என்ற தகவல்களும் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் கடலோர பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். ஆனால் அது போன்று சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று (நேற்று) காலை 7.02 மணியளவில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே, வடகிழக்கே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில், கடல் மட்டத்துக்கு கீழ் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவாகி இருக்கிறது.

வடக்கு அந்தமான், போர்ட்பிளேர் மற்றும் சென்னையில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பதிவாகி இருக்கின்றன. கடல் மட்டத்துக்கு கீழே ஏற்பட்டதால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. இந்த நிலநடுக் கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதிகளில் இருந்து தென்கிழக்கு அரபிக்கடல் வரை வளிமண்டலத்தில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே பகுதிகளில் நிலவுகிறது. அடுத்த 2 நாட்களில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் சென்னைக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதன் தாக்கல் சென்னையில் சில இடங்களில் காணப்பட்டது. அந்த சமயத்தில் 3 மாடி கட்டிடத்துக்கு மேல் குடியிருந்தவர்கள் அதன் அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றும் சில இடங்களில் இதேபோன்று நில அதிர்வு தான் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட தகவலின் படி, பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று சொன்னாலும், முழுமையான தகவல்கள் வந்த பிறகு தான் உண்மை நிலவரம் தெரியவரும். இதுதொடர்பான ஆய்வுகளில் வானிலை அதிகாரிகள் ஈடுபட்டு இருக்கின்றனர்.

Next Story