ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர்கள் வைக்க அனுமதி கோரிய மனு நிராகரிப்பு


ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர்கள் வைக்க அனுமதி கோரிய மனு நிராகரிப்பு
x
தினத்தந்தி 13 Feb 2019 11:23 AM GMT (Updated: 13 Feb 2019 11:23 AM GMT)

ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர்கள் வைக்க அனுமதி கோரிய மனுவை நீதிபதிகள் நிராகரித்து உள்ளனர்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பேனர்கள் வைப்பதற்கு எதிரான மனு மீது கடந்த டிசம்பரில் நடந்த விசாரணையில், அரசியல் கட்சியினர் சட்டவிரோதமாக வைக்கும் பேனர்களை அகற்ற முடியவில்லை என்றால், அரசு அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியல் கட்சிகளில் சேர்ந்துவிடுங்கள் என நீதிபதிகள் கடுமையாக கூறினர்.

தொடர்ந்து, பேனர்கள் வைப்பதற்கான விதிகளையும், இந்த ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள பல்வேறு உத்தரவுகளையும் தீவிரமாக அமல்படுத்துவோம். விதிமீறல் எதுவும் இருக்காது என்று தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்பும் உறுதியான உத்தரவாதம் தரும் வரை, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் எந்த ஒரு பேனர்களையும் வைக்கக்கூடாது.

தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான சாலைகள், சாலையோரங்களில் இருபுறமும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் ஆகியோருக்கு இடையூறாக பேனர்கள் வைக்க மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து பேனர்கள் வைக்க அ.தி.மு.க. முடிவு செய்தது.

இதனால் பிறந்த நாள் வாழ்த்து பேனர்கள் வைப்பதற்கான முன் அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. பாலகங்கா மனு செய்துள்ளார்.

ஆனால் இதனை விசாரணை செய்த நீதிபதிகள், அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்கக்கூடாது என்ற உத்தரவை மாற்றியமைக்க மறுத்து விட்டனர்.  மனுவையும் நிராகரித்தனர்.  தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Next Story