புதுச்சேரி: காங்கிரஸ் சார்பில் நாளை நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு


புதுச்சேரி: காங்கிரஸ் சார்பில் நாளை நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 13 Feb 2019 4:54 PM GMT (Updated: 13 Feb 2019 4:54 PM GMT)

புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் நாளை நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் நாளை நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக, முதல்வர் நாராயணசாமி இன்று பிற்பகல் முதல், கவர்னர் மாளிகை முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

முன்னதாக பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது. இதில் கவர்னர் கிரண்பேடி சாலையில் நின்று, வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிய அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து கட்டாய ஹெல்மெட் உத்தரவை உடனடியாக அமல்படுத்த முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

துணைநிலை கவர்னரின் தலையீட்டால் அரசை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டிய நாராயணசாமி, கவர்னர் மாளிகை முன் அமைச்சர்களுடன் சென்று தர்ணா போராட்டம் நடத்தினார். அங்கேயே அலுவலக கோப்புகளிலும் கையெழுத்து போட்டனர். பின்னர் புதுச்சேரியில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது .

இந்த போராட்டம் காரணமாக கவர்னர் மாளிகை முன்பு, துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் நாளை (வியாழன்) நடைபெற இருந்த முழுஅடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

மேலும் 2 நாட்களுக்குள் துணைநிலை ஆளுநர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால், கூட்டணி கட்சிகளுடன் பேசி முழுஅடைப்பு நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் நாராயணசாமியுடன், போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து தலைமை செயலர் அஸ்வனி குமார், டி.ஜி.பி சுந்தரி நந்தா பேச்சுவார்த்தை நடத்தினர்.

Next Story