ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சி ஆகிறது சட்டசபையில் மசோதா தாக்கல்


ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சி ஆகிறது சட்டசபையில் மசோதா தாக்கல்
x
தினத்தந்தி 13 Feb 2019 9:30 PM GMT (Updated: 13 Feb 2019 7:46 PM GMT)

புதியதாக உருவாக உள்ள ஒசூர், நாகர்கோவில் மாநகராட்சிகள் அமைப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை, 

புதியதாக உருவாக உள்ள ஒசூர், நாகர்கோவில் மாநகராட்சிகள் அமைப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா இன்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்படுகிறது.

ஒசூர், நாகர்கோவில்

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 12 மாநகராட்சிகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2017–ம் ஆண்டு செப்டம்பர் 23–ந்தேதி நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓசூர் நகராட்சி, தமிழகத்தின் 13–வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.

அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22–ந்தேதி நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகர்கோவில் நகராட்சி, தமிழகத்தின் 14–வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

மசோதா தாக்கல்

இதற்கிடையே, இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓசூர் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப, மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்து இருந்தார். அதேபோல் கன்னியாகுமரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்த ஓசூர், நாகர்கோவில் ஆகிய 2 நகராட்சிகளும் மாநகராட்சியாக மாற்றப்படுவதற்கான அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக, அரசானது தேவைப்படும் மாற்றமைப்புகளுடன், 1981–ம் ஆண்டு கோவை மாநகராட்சி சட்டத்தின் வரைமுறைகளை தழுவி ஒரு சிறப்பு சட்டத்தினை இயற்றுவதென முடிவு செய்துள்ளது.

அதிகாரம்

இந்த சட்டம் தொடங்கிய தேதி முதல் இந்த நகராட்சிகளில் அடங்கியுள்ள உள்ளாட்சி பரப்பிடமானது மாநகராட்சிகளாக அமைதல் வேண்டும். அதன்படி, ஓசூர் நகராட்சி, ஓசூர் மாநகராட்சி என்றும், நாகர்கோவில் நகராட்சி, நாகர்கோவில் மாநகராட்சி என்ற பெயரில் மாநகராட்சியென்று அமைக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும்.

இந்த சட்டத்தின் வரைமுறைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு மேயர், ஒரு மன்றம், ஒரு நிலைக்குழு, ஒரு சிற்றொகுதிகள் குழு, ஒரு ஆணையர் ஆகியோர் கொண்ட அதிகார அமைப்புகள் பொறுப்புடையதாக இருக்க வேண்டும். மன்றத்தில் பெண்களுக்கென பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும். வரி அல்லது கட்டணம் விதிப்பது மற்றும் வசூலிப்பது தொடர்பான வகைமுறைகள் உள்ளடங்கலான இதன்மூலம் மாநகராட்சிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று நிறைவேற்றம்

இந்த சட்டத்திற்கு பிறகு, நகராட்சியால் விதிக்கப்பட்டு வந்த அனைத்து வரிகளும், கட்டணங்களும், தீர்வைகளும் மாநகராட்சியால் விதிக்கப்பட்டு வந்திருப்பதாக கருத வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்கள் மன்றத்திற்கு வரும் வரையில், மாநகராட்சியில் தனி அலுவலர் நியமிக்கப்படுவார். அரசால் ஆணையர் நியமிக்கப்படும் வரையில் ஆணையரின் அதிகாரத்தை செலுத்தவும், கடமைகளை செய்யவும், செயல்பாடுகளை செய்து முடிக்கவும் இந்த நியமனம் அவசியம். இந்த சட்டத்தின் வகைமுறை செயற்படுத்துவதில் இடர்பாடு ஏதேனும் எழுந்தால், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதாக்கள் இன்று (வியாழக்கிழமை) சட்டசபையில் நிறைவேற்றப்படுகிறது.


Next Story